சுவாதி கொலையாளியை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து மர்மம்

490 0

201606291144282621_swathi-murder-case-mystery-continues-two-young-men-intensive_SECVPFசென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அன்று காலை 6.30 அளவில் ரெயில் நிலையத்தில் பெரிய அரிவாளுடன் புகுந்த வாலிபர், பயணிகள் மத்தியில் வைத்தே சுவாதியை வெட்டி சாய்த்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இத்துணிகர கொலை சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சுவாதி கொலை தொடர்பாக முதலில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணை சென்னை மாநகர போலீசுக்கு மாற்றப்பட்டது. நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த 6 நாட்களாக பல்வேறு கோணங்களில் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலையாளி ரெயில் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகளும், அவனது புகைப்படங்களும், போலீசுக்கு கிடைத்தன. இதை வைத்து, துப்பு துலக்கப்பட்டு வருகிறது. கொலையாளியின் போட்டோக்களை தமிழகம் முழுவதும் போலீசார் உடனடியாக பரவவிட்டனர்.

கொலைகாரன் விட்டுச்சென்ற அரிவாளில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் போலீசார் எடுத்தனர். பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் அதனை ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனின் நேரடி மேற்பார்வையில், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர்கள் தேவராஜ், முத்துவேல்பாண்டி, கலிதீர்த்தான் உள்ளிட்டோரும் தனிப்படையில் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 8 தனிப்படையினர் சுவாதி கொலை வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

சுவாதியின் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலீசுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன. நெருங்கிய தோழிகள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களை சேகரித்தனர். இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் கொலையாளி பற்றி துப்பு துலங்கிவருவதாக கூறப்பட்டது. கொலையாளியை போலீசார் நெருங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் இந்த விசாரணையின் முடிவில் போலீசாரால் கொலையாளியை இன்னும் நெருங்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவாதியை கொன்ற கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

இருப்பினும் சுவாதி கொலை தொடர்பாக சந்தேகத்துக்கிடமான 2 வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த 2 இளைஞர்களிடம் இருந்தும் விசாரணைக்கு தேவையான தகவல்களை திரட்டியுள்ளனர். அதே போல சுவாதியின் நெருங்கிய தோழிகள் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுவாதியை பின் தொடர்ந்து சென்று, வாலிபர்கள் யாரேனும் தொல்லை கொடுத்தார்களா? அதனை நீங்கள் யாரும் நேரில் பார்த்தீர்களா? இல்லை அது தொடர்பாக சுவாதி உங்களிடம் ஏதேனும் தகவல்களை பகிர்ந்து கொண்டாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி உள்ளனர்.

இதற்கு பதில் அளித்த தோழிகள் சிலர், போலீசுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். சுவாதி தினமும் நடந்து செல்லும் பாதையில் யாராவது அவருக்கு தொல்லை தந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சுவாதி செல்லும் போது, வாலிபர் ஒருவர் வந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பிரச்சினை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இப்படி சுவாதி கொலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கை பொறுத்தவரையில், கேமராவில் பதிவான வாலிபர்தான் கொலையாளி என்பதை மட்டுமே போலீசார் உறுதி செய்தனர். அவர் யார்? என்பது பற்றிய கேள்விக்கு இன்னும் விடை தெரியாமலேயே உள்ளது. அதே நேரத்தில், கொலைக்கான காரணம் என்ன? என்பதையும் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால், சுவாதி கொலை வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகவே காணப்படுகிறது.

கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் கொலையாளி யார் என்பது பற்றிய எந்தவித உறுதியான தடயமும் சிக்காத நிலையில், கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோலவே போலீசாரின் நிலைமை உள்ளது.

இருப்பினும், இந்த வழக்கை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறோம். சிறப்பாக பணியாற்றும் உதவி கமிஷனர்களும், இன்ஸ்பெக்டர்களும் தனிப்படையில் இடம் பெற்றுள்ளனர். எனவே சுவாதி கொலையில் இன்னும் சில தினங்களில் துப்பு துலக்கிவிடுவோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Leave a comment