25 வயதான சந்திராணி முர்மு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மிகவும் இளம் வயது எம்.பி. பிஜூ ஜனதாதளத்தை சேர்ந்தவர்

297 0

பிஜூ ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயதான சந்திராணி முர்மு, நாடாளுமன்றத்தின் மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை பெற்று உள்ளார்.

பிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதன்முதலில் அமல்படுத்தியவர் ஆவார். அந்த அடிப்படையில் அங்குள்ள கியோன்ஜார் (தனி) தொகுதிக்கு படித்த இளம்பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்த எண்ணினார்.

இதற்காக ஒருவரை தேடியபோது சந்திராணி முர்மு என்ற இளம்பெண் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த அவர், திடீரென வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியல் களம் கண்டார். இவரது தாத்தா அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி. என்றாலும், கடந்த 20 ஆண்டுகளாக முர்முவின் குடும்பத்தினர் யாரும் அரசியலில் இல்லை.

இவ்வாறு அரசியல் அனுபவம் இல்லாத முர்முவை, 2 முறை எம்.பி.யான பா.ஜனதாவின் ஆனந்த நாயக்கை எதிர்த்து கியோன்ஜார் தொகுதியில் துணிந்து களமிறக்கினார் நவீன் பட்நாயக். அவரது நம்பிக்கையை வீணாக்காத முர்முவும், பழங்குடியினர் அதிகம் வாழும் அந்த தொகுதியில் 66,203 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இவரது வயது 25 ஆண்டு மற்றும் 11 மாதங்கள் ஆகும். இதன் மூலம் நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை முர்மு பெற்று இருக்கிறார்.

இவருக்கு முன்னதாக கடந்த தேர்தலில் அரியானாவின் ஹிசார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற துஷ்யந்த் சவுதாலாதான் மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை பெற்றிருந்தார். இவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரது வயது 26 ஆகும்.

தன்மீது தொகுதி மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் எனக் கூறியுள்ள சந்திராணி முர்மு, தனது தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே முக்கியமான பணி என தெரிவித்தார்.

சுரங்க தொழிலுக்கு பெயர்பெற்ற கியோன்ஜார் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், அங்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்காமல் ஓயமாட்டேன் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.