பாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது!

329 0

சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாதச் செயல்கள், சர்வதேச பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்ட போதிலும்கூட அதனை எமது நாட்டுக்குள்ளேயே ஒரு இன ரீதியாகப் பார்க்கும் நிலைமையே தற்போது நிலவுகின்றது. அது நமது மக்கள் மத்தியில் ஒரு பாரிய வேற்றுமைகளையும், பலவீனத்தையும், ஏற்படுத்துகின்றது.

இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தினருக்கும், இடையில் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை திருகோணமலையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்ட பின்னர், நாட்டில் ஏற்பட்ட சில பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாகப் பாதுகாப்பு நிலைமைகள் தற்போது இன்னும் மோசமடைந்திருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு வன்முறைகளுக்கு, உள்ளாகி வந்திருக்கின்றார்கள். தமிழர்களுடைய உரிமைப்போராட்டம் தொடர்பாக, ஒரு அரசியல் தீர்வு பெறுவதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு, பல முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதியிலும்கூட அது இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை. குறித்த விடயம் தொடர்பில் விரைவில் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்கான எமது முயற்சிகள் தொடர்கின்றன.

தமிழ் மக்கள் பலமாய் இருப்பதற்கு அவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டியது அத்தியவசியம். பல்வேறு காரணங்கள் நிமித்தம் மக்கள் மத்தியில் எல்லாக் கருமங்களிலும் ஒருமித்த கருத்து இருப்பது, ஒரு கடினமான விடயம்.

ஆனால் தமிழ் மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமைதான் அவர்களுடைய பலம். அவர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள்.

சமீபத்தில் கூட நாட்டில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டபொழுது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள், விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள், ஒற்றுமையாக ஒருமித்துச் செயற்பட்ட காரணத்தின் நிமித்தம், நாங்கள் எமது பலத்தை நிரூபிக்கத்தக்கதாக இருந்தோம்.

இந்த வருடத்தில் தேர்தல்கள் நடைபெறும். மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பன நடைபெற வேண்டும்.

வருகின்ற வருடத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறலாம், அல்லது அதற்கு முன்பாகவும் நடைபெறலாம், இந்தவிதமான லிடயங்கள் நடைபெறுகின்றபோது தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக தங்களுடைய செயற்பாட்டின் மூலமாக தங்களுடைய பலத்தைப் பிரதிபலிக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும். அது அத்தியாவசியமாகும்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாங்கள் எடுக்க வேண்டிய அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கின்றோம்.

அரசியல் கைதிகளை விடுவிக்கவில்லை என நாங்கள் பொத்தாம் பொதுவில் சொல்ல முடியாது ஐம்பது வீதமானவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

மற்றவர்கள் விடுபடுவதைப் பொறுத்தவரையில், அதில் சில தாமதங்கள் இருக்கின்றன. ஆனால் எமது முயற்சி அந்த விடயம் சம்பந்தமாகத் தொடர்கின்றது.

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எமது கட்சி, பாராளுமன்ற உறுப்பினர்கள், எமது பாராளுமன்ற குழு கூடி, உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை நாங்கள் அறிவிப்போம்” என அவர் தெரிவித்தார்.