பிரான்சிஸ் அடிகளார் எங்கே?

192 0

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பத்துவருடங்களாகிவிட்டன.தங்கள் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இழந்த ஆயிரக்கணக்கானவர்களிற்கு அவை யுத்தத்தின் கொடுமையை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் விடயமாக காணப்படுகின்றன.

இது  பிரான்சிஸ் அடிகளாரின் கதை

——————

மூன்று தாசப்தகாலம் நீடித்த அந்த ஈவிரக்கமற்ற யுத்தம் மே 18 ம் திகதி முடிவிற்கு வந்தது.ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்படுகின்றது.ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இது இன அடிப்படையில் இடம்பெற்ற போர்.தமிழ் சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் காணப்பட்ட சுதந்திர தேசத்திற்கான விருப்பம், ஆயுத பிரிவினைவாத கிளர்ச்சி குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.

அவர்கள் இலங்கை இராணுவத்தினருடன் மோதினார்கள். இரு தரப்பினர் மீதும் பொதுமக்களிற்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.

மோதலின் இறுதிநாளன்று கத்தோலி;க்க மதகுருவொருவர் 360 பேர் சரணடைவது குறித்த பேச்சுவார்த்தைகளிலும் முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

இவர்களில் இரண்டு வயது குழந்தைகளும் விடுதலைப்புலிகளும் காணப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இராணுவத்தின் பேருந்தில் ஏற்றப்பட்டனர். அதன் பின்னர் அவர்களிற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

பிரான்சிஸ் அடிகளார் தமிழர்களிற்கான சுதந்திரத்தினை தீவிரமாக ஆதரித்தவர் ஆனால் அவர் ஆயுதமேந்தவில்லை.வார்த்தைகளே அவரது ஆயுதங்களாக காணப்பட்டன.

பாப்பரசரிற்கு கடிதம்

யுத்தம் முடிவடைவதற்கு எட்டு நாட்களிற்கு முன்னர் அவர் வத்திக்கானிற்கு உதவியை கோரி மன்றாட்டமான ஒரு கடிதத்தை எழுதினார்.அந்த கடிதத்தில் அவர் கைவிடப்பட்ட உணர்வை வெளிப்படுத்தினார்.

பரிசுத்த பாப்பரசரிற்கான அந்த கடிதத்தில்

இலங்கை அரசாங்கம் தமிழ் தேசத்தை அழிப்பதற்கான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது- இனப்படுகொலை யுத்தம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

விசம் மற்றும் ஆபத்தான வாயுக்களால் நிரம்பியுள்ள வானை குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்களின்  துயரங்களும் வேதனைகளும்  துளைக்கின்றன எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயம் யுத்தம் குறித்த தனது கருத்துக்களை துணிச்சலுடனும் தயக்கமின்றியும் வெளிப்படுத்துவதற்கான ஞானத்தையும் துணிச்சலையும் கொண்டிராதது துரதிஸ்டவசமானது எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் இலங்கை அரசாங்கத்தை சீற்றமடையச்செய்து என்னை கொலை செய்வதற்கு தூண்டுமா என்பது எனக்கு தெரியவில்லை எனவும் பரிசுத்த பாப்பரசரிற்கான கடிதத்தில் பிரான்சிஸ் அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதம் பதுங்குழிக்குள் இருந்து எழுதப்பட்டது,அந்த இடம் தற்போது கொல்லப்பட்டவர்களிற்கான நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டுள்ளது.

வத்திக்கானை பிபிசி இது தொடர்பில் தொடர்புகொண்டது. ஆனால் இதுவரை பதில்கள் ஏதுவும் கிடைக்கவில்லை.

இந்த கடிதம் எழுதப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

பிரான்சிஸ் அடிகளார் தனது இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து இராணுவத்தினரின் பகுதியை நோக்கி- வட்டுவாகல் பாலம்- சென்றார்.

கடல் கொல்லப்பட்டவர்களின் உடல்களால் நிரம்பிக்காணப்பட்டது குருதி நிறத்தி;ல் மாறியிருந்தது என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றுவரை பிரான்சிஸ் அடிகளாரின் நண்பர்கள் சகாக்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனவர்களிற்கான பதிலை கோரி இலங்கையின் வடபகுதியில் அடிக்கடி வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி யுத்தத்தில் சிறிய நிலப்பரப்பிற்குள் சிக்குண்டவர்கள்.

ஐநா 40,000 பேர் கொல்லப்பட்டனர் மேலும் பெருமளவானோர் காயமடைந்தனர் என தெரிவிக்கின்றது.

எனினும் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரிக்கின்றது.

சரணடைந்தவர்கள் கொல்லப்படவில்லை என தெரிவிக்கும் இலங்கை இராணுவம் தனிநபர்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுக்கின்றது.

உண்மைய அறிவதற்கான முயற்சிகள்

மோசஸ் அருளானந்தன் பிரான்சிஸ் அடிகளாரின் நெருங்கிய நண்பர்.தனது நண்பர் காணாமல்போயுள்ளமையால் பெரும் துயரடைந்துள்ள அவர் உள்ளுர் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளதுடன் ஐநாவிற்கும் மனு அனுப்பியுள்ளார்.ஆனால் இந்த முயற்சிகளால் எந்த பலனும் கிட்டவில்லை.

அவரை நினைத்து கவலையடைவும அழவும் மாத்திரமே எங்களால் முடியும்,நாங்கள் மிக நெருக்கமான நண்பர்களாகயிருந்தோம் அவர் எனது உடன்பிறவா சகோதரர் போல காணப்பட்டோம், என தெரிவிக்கும் மோசஸ் அருளானந்தன் அவர் பெற்றோரிற்கு ஒரேயொரு மகன்,பிரான்சிஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவேளை நானே அவரது தாயாரிற்கு உதவிபுரிவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரான்சிஸ் அடிகளார் முதலில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் மாணவராகவே இணைந்து கொண்டார்.

பின்னர் ஆங்கில ஆசிரியராக  இணைந்துகொண்ட அவர் பின்னர் அதிபரானார்.

பாடசாலையில் அனைவரினது பெயரையும் அவர் அறிந்துவைத்திருந்தார் என முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலையில் அவரது பாராம்பரியம் இன்றும் காணப்படுகின்றது,பாடசாலை நூலகத்தில் அவரது உருவப்படத்தை காணமுடிகின்றது.

அவர் இருக்கும் இடத்தை காண்பியுங்கள் என ஒவ்வொருநாளும் அன்னை மரியாளை நான் பிரார்த்திக்கின்றேன்,என்கின்றார் அருளானந்தன்.

இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரை கடுமையாக  விமர்சித்த பிரான்சிஸ் அடிகளார் விடுதலைப்புலிகளால் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து அமைதியாகயிருந்தார்.

இறுதி தருணங்கள்

இறுதி சரணடைவி;ற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் போரளிகளும் பொதுமக்களும் தங்கள் தலைவிதி என்னவென தெரியாத நிலையில் இராணுவசோதனைசாவடி முன்னாள் காத்திருந்தனர்.

பிரான்சிஸ் அடிகளாருடன் பேருந்தி;ல் ஏறியவர்களில் ஒருவர் ஜெயக்குமாரி கிருஸ்ணகுமார் – இவர் முக்கிய போராளியொருவரின் மனைவி.

சரணடைந்த அனைவரினது  பெயர் விபரங்களை பிரான்சிஸ் அடிகளார் பதிவு செய்தார் என அவர் குறிப்பிட்டார்.

முதலில் படையினரின் பேருந்தில் எனது கணவர் ஏறினார்,பின்னர் பலர் ஏறினார்கள், இறுதியாக பிரான்சிஸ் அடிகளார் ஏறினார் என அவர் குறிப்பிட்டார்.

தனது வெள்ளையாடைக்கு இராணுவம் மதிப்பளிக்கும் என பிரான்சிஸ் அடிகளார் கருதினார் என தெரிவித்த ஜெயக்குமாரி கிருஸ்ணகுமார் பிரான்சிஸ் அடிகளார் அச்சமடைந்திருந்தார்,ஆனால் அனைத்தும் சரியாகிவிடும் என கருதினார்,அவருடன் சென்றால் தங்களிற்கு பாதுகாப்பு என மக்களும் நம்பினார்கள் எனவும்  குறிப்பிடுகின்றார்.

குறிப்பிட்ட சம்பவத்தில் பலர் காணாமல்போனதே இலங்கை இராணுவத்தினால் ஒரே தடவையில் அதிகளவானவர்கள் காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவமாகும் என தெரிவிக்கின்றார் ஐநா குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜஸ்மின் சூக்கா

இந்த சம்பவத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நீதிமன்றங்கள் மூலம் தங்களிற்கு நீதி கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

காணாமல்போனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என தெரிவிக்கும் ஜஸ்மின் சூக்கா அவர்கள் சரணடைந்ததும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பை அவர்களிற்கு வழங்கவேண்டும்,கௌரவத்துடன் அவர்களை நடத்தவேண்டும் அவர்கள் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

மறுக்கும் இலங்கை இராணுவம்

இவர்கள் யுத்த குற்றங்களிற்கு பலியாகியிருக்கலாம் என்பதை இலங்கை இராணுவம் மறுக்கின்றது.

இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் கொல்லப்படவில்லை அது நிச்சயம் என்கிறார் இராணுவப்பேச்சளர் சுமித் அத்தப்பத்து.

இலங்கை இராணுவத்தின் பிடியில் தற்போது எந்த கைதிகளும் இல்லை,ஐக்கியநாடுகளின் பிரதிநிதிகள் உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகள் எங்கள் முகாம்களை வந்து பார்வையிடுகின்றனர்,இலங்கையில் இரகசிய தடுப்புமுகாம்களும் இல்லை,எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால் பிரான்சிஸ் அடிகளார் எங்கே?

பல வருட சர்வதேச அழுத்தத்தின் பின்னர் 2017 இல் இலங்கை அரசாங்கம் காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தை அமைத்தது.காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களை கண்டுபிடிப்பதற்கான பாரிய பொறுப்பு அந்த அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுவரை காணாமல்போன ஒருநபர்கூட கண்டுபிடிக்கப்படவில்லை,ஆனால் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அந்த அலுவலகம் தெரிவிக்கின்றது.

நீங்கள் வெளியே சென்று நாங்கள் ஆட்களை தேடுகின்றோம் என தெரிவிக்க முடியாது.இது அவ்வாறான நடவடிக்கையில்லை,என்கின்றார் அந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடம் வேதனையும் நம்பிக்கையும் கலந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

தங்கள் பெற்றோர்கள் வீடு திரும்புவதற்காக குழந்தைகள் காத்திருக்கின்றன.

பிரான்சிஸ் அடிகளாரை கண்டுபிடிக்கலாம் என்பது குறித்தோ அல்லது அவரிற்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியவரும் என்பது குறித்தோத எவரும் நம்பிக்கையிழக்கவி;ல்லை.

உண்மை ஒரு நாள் வெளிவரும் என்கின்றார் அருளானந்தன்.

தமிழில் ரஜீபன்