10 நாட்களில் ஆட்சியை மாற்றி காட்டுவேன்- துரைமுருகன் சவால்

375 0

22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்று முதல்வருக்கு துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த கூட்டத்திற்கு பெண்கள் அதிகம் வந்துள்ளதை பார்கும்போதே நமக்கு வெற்றி உறுதி என்பது தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு வருமாறு செந்தில்பாலாஜி என்னை அழைக்கும்போது, வீடற்ற 25ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்குவதாக கூறினார். நீங்கள் என்ன மந்திரியான்னு கேட்டேன், உடனே அவர் தனது சொந்த நிதியில் நிலம் வழங்குவதாக கூறினார்.

மக்களுக்கு செய்ய வேண்டிய மந்திரிகளே செய்யாத போது இப்படி ஒரு வேட்பாளரை நான் இதுவரை பார்த்தது இல்லை. 11 முறை தேர்தலில் நின்ற நானே இவரிடம் பாடம் படிக்கனும் போல் உள்ளது. அவர் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால்தான் அவரை தி.மு.க.விற்கு அழைத்து வந்து விட்டோம்.

கருணாநிதி இலவச மின்சாரத்தை தந்தார். அதை ஜெயலலிதா ரத்து செய்ய முயற்சித்தபோது நாங்கள் போராடி அத்திட்டத்தை காப்பாற்றி வைத்துள்ளோம். புகழூர் பகுதியில் கதவணை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதற்கான திட்ட அறிக்கையை காட்டுங்க, எப்ப நிதி ஒதுக்கீடு செய்தீங்க? பொய் சொல்லி மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் சட்ட சபையில் எங்களுக்கு பதில் சொல்லித்தான் வேண்டும்.

இந்த இடைத்தேர்தலோடு அவரின் முதல்வர் பதவி முடிவுக்கு வரப்போகிறது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று சொன்னதுக்கே சசிகலா அவரின் முதல்வர் பதவியை பறித்து விட்டார்.

ஆனால் நாங்கள் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இதுவரை நடந்து வருகிறோம். மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் வங்கி வாசலில் மக்களை நிறுத்தியதால் அவரது ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் முடிவு கட்ட உள்ளனர்.

ஸ்டாலின் முதல்வரானால் 100 நாள் திட்டத்தின் வேலை நாட்கள் உயர்த்தப்படுவதுடன் 5 பவுனுக்கு கீழான நகை கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

துரைமுருகன் என்பது தனிப்பட்ட சக்தி அல்ல. கட்சியின் பொருளாளர், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும், பல தேர்தல்களையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த தேர்தலில் அதிகப் படியான சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன் என்று சொன்னால் முதல்வருக்கு கோபம் வருகிறது.

இப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன். இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா?

இவ்வாறு அவர் பேசினார்.