ஒப்பிட முடியாத பெருவலி மே 18.

1114 0

காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும் என்ற மேதமையோரின் சிந்தனை வழியேயான உளவியற்போரைத் தமிழினத்தின்மீது சிங்களத்துக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் என்பதுபோல் இந்த அனைத்துலக குமூகமும் செயற்படுத்த முனைவது கோளைத்தனத்தின் அதியுச்சமாகும். இந்தக் ஈனத்தனம் குறித்து உலகத்தமிழினம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். தமிழினத்தைப் பத்து ஆண்டுகளிற்கு முன் பெரும் படைக்கலப் பிரயோகத்தோடு பன்னாட்டு ஆளணி ஆயுத தொழில் நுட்பம் மற்றும் புலனாய்வுத் தகவல் என்பவற்றோடு சிங்கள உயரினவாத அரசு ஒருபுறம் ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தவிட்டு தமிழினத்தின் மீது போரைத் தினிக்க மறுபுறமாகப் பேச்சுக்கென்று அழைத்து அடைத்துவைத்து அச்சுறுத்தி அனைத்து விதங்களிலும் அடிபணிய வைக்க எடுத்த முயற்சிகள் தோற்றதன் விளைவாகத் தாக்குதலுக்குப் பச்சைகொடிகாட்டிய மேற்குலக நாடுகளின் வேடங்கள் கலைந்து கொண்டிருப்பதை இந்த உலகு பார்க்கத் தொடங்கியுள்ளது. தமது சொந்த மக்களின் பலத்தோடும் பங்களிப்போடும் அர்ப்பணிப்போடும் அமைக்கப்பட்ட நடைமுறை அரசைக்கொண்ட தமிழினத்தின் அழிவிலே உலகுக்கும் பெரும்பங்குண்டென்பதைத் தமிழினம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்க இந்த நிர்பந்தித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் முதல் பொஸ்பரஸ் குண்டுகள் வரை தமிழர்களைக் கொத்துக்கொத்தாக வயது பால் வேறுபாடின்றிக் கொன்றொழிக்கக் கொடுத்துதவிய நாடுகள் அவற்றை பதிவுசெய்து ஆவணப்படுத்தி வைத்துத் தமது பொருண்மிய நலன்களை அடையத் தமிழினத்தின் உரிமைப்போரைப் பலியிடும் ஈனத்தனமான செயலைச் செய்வதை நிறுத்தி இனியாவது உனது விழிதிறக்கமாட்டாயா என உலகத் தமிழினம் கேட்டுநிற்பதை புரிந்துகொள்ள மறுப்பதானது இந்த நாடுகள் மனித உரிமைக்கும் மனித உயிர்களுக்கும் எவளவு தூரம் மதிப்பளிக்கின்றன என்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை எந்த ஒரு மனிதம் உள்ள மனிதனுக்கும் சுட்டத்தேவையில்லை. ஆனால், சிறிலங்கா அரசபடைகளிடம் எந்தவொரு மனிதாபிமாத்தையும் காணமுடியாதென்பதற்கு சிறுவனான பாலச்சந்திரனே ஒரு குறியீடாகவும் சாட்சியாகவும் உள்ளதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத கண்டனத்துக்குரிய படுகொகைள் என்பதை மறுக்கமுடியாது. அதேவேளை சிறிலங்காஅரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட நவாலிப் படுகொலைகளாகட்டும் மடுத்தேவாலயப் படுகொலைகளாகட்டும் இவற்றையும் இவ்வேளையிற் சிந்தைகொள்ள வேண்டியவராகவுள்ளோம்.

உயிர்த்த ஞாயிறுப்படுகொலைகள் பறித்த உயிர்களைப்போன்று பன்மடங்கு உயிர்களைத் துடிக்கத் துடிக்கச் சிங்களம் காவுகொண்டதையும் இவ்வேளையில் இவ்வுலகும் சிங்கள தேசத்தில் மனிதாபிமானம் உள்ளோரும் சிந்திக்கவேண்டும். இரண்டு இழப்பிலும் சிக்கித் தவிப்பதென்னவோ தமிழினமே. இப்போது தலைநகரில் நடந்த இழப்பைக் கண்டறிய இந்த உலகுக்கு ஐநா தீர்மானங்களோ வாக்கெடுப்புகளோ ஒப்புதல்களோ தேவைப்படவில்லை. ஆனால், தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்பட்டபோதும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும் தீர்மான வித்தைகளில் விளையாட்டாகக் காலத்தைக் கரைக்கிறது. சிங்கள ஆட்சியாளரும் இந்த காலக் கரைவிற் தமிழினத்தின் உரிமைப்போரை நீர்த்துப்போகச் செய்துவிடத் துடிக்கிறது.

2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய அவலங்களையும் அழிவுகளையும் இதே வேகத்தோடு அனைத்துலக குமுகாயம் விசாரித்திருப்பின் 2019இன் உயிர்த் ஞாயிறு அழிவுகள் தவிர்கப்பட்டிருக்கும்.ஏனென்றால் நீதியின் வழிபிறக்கும் நிலையான அமைதியே சமத்துவமான சட்டத்தின் ஆட்சிக்கு வழிகோலும். பாரபட்சமற்ற ஆட்சிமுறையொன்றினூடாக மட்டுமே இதுபோன்ற அனர்த்தங்களை இல்லாதொழிக்க முடியும். இல்லையேல் அவலங்களின் களமாக ஈழத்தீவு தொடர்ந்தும் அவலத்துள் சிதைவுறும். எனவே இப்போதாவது தமிழினத்தின் மேற் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனஅழிப்பைத் தமது ஒற்றைச் சந்தைப் பொருண்மிய நலனுக்கான கடிவாளமாகக் கையாளாது முள்ளிவாய்காலில் நிகழ்த்தப்பட்ட 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சிறீலங்கா அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க இந்த அனைத்துலகும் ஐநாவும் முன்வரவேண்டும் என்பதே தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டிலாவது நீதியையும் நீதியோடு சேர்ந்து உறவுகளையும் தேடும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எதிர்பார்ப்புக்கான அத்தனை நியாயப்பாடுகளும் தமிழினத்துக்குண்டென்பதை இந்த உலகு இப்போதாவது புரிந்து கொண்டு, அனைத்துலகப் பொறிமுறையூடான விசாரணையொன்றின் ஊடாகவே இலங்கைத்தீவில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை உலகிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் உண்மையின் பக்கம் நிற்கும் ஊடகங்களும் பதிவு செய்துவருவதை கவனத்திலெடுக்க வேண்டுமென்பதே காலத்தேவையாகும். என்னதான் இந்த உலகு தூங்குவதுபோல நடித்தாலும் உலகத் தமிழினம் தனக்கு மறுக்கப்படும் நீதிக்காகக் தொடர்ந்தும் குரல்கொடுக்க ஒப்பிட முடியாத பெருவலி சுமந்த முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பத்தாவது ஆண்டிலும் உறுதியேற்று நிற்கிறது.