ஓய்விலுள்ள, சேவையிலுள்ள யுத்த வெற்றிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்த படைவீரர்களை தான் ஒருபோதும் கைவிடப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அரசாங்கம் படைத்தரப்பின் பலம் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹிங்குராங்கொடை ராஜரட்ட வித்தியாலத்தில் இடம்பெற்ற யுத்த வெற்றிவீரர்களுக்கான விருசர சிறப்பு சலுகை அட்டைகளை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புப் படையினரை பலவீனப்படுத்தும் முகமாக அரசாங்கம் முகாம்களை அகற்றி வருகின்றது என்ற குற்றச்சாட்டையும் மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.
சலாவ ஆயுதக் கிடங்கு வெடிப்பிற்கு பாதுகாப்புப் படையினரின் கவனயீனமே காரணம் என அதிகாரி ஒருவர் கூறியதை நிராகரித்ததுடன், இதைவிட பாரியளவிலான வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாலக்க கொலன்னே, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.பீ.பீ கித்சிறி, முப்படைகளின் தளபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.