இத்தாலியின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்ஸர் காலமானார்

5121 0

201606280938075266_Italian-Comedy-actor-Bud-Spencer-dead-at-86_SECVPF“பைவ் மேன் ஆர்மி” உள்ளிட்ட மிகச் சிறந்த படங்களில் தோன்றிய இத்தாலியின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்ஸர் இன்று காலமானார். இத்தாலி நாட்டில் 31-10-1929 பிறந்த பட் ஸ்பென்ஸரின் இயற்பெயர் கார்லோ பெடர்சோலி. இளமைக் காலத்தில் பிரபல நீச்சல் வீரராக திகழ்ந்த இவர், இத்தாலியில் 100 மீட்டர் ’ப்ரீ ஸ்டைல்’ நீச்சலை ஒரே நிமிடத்தில் முடித்த நீச்சல் வீரர் என்ற புதிய சாதனையை உருவாக்கினார்.அதன்பிறகு, நீச்சல் போட்டிகளில் பல்வேறு பரிசுகளை தேசிய அளவில் பெற்று மக்களிடையே பிரபலமானார். பின்னர் தொழில்முறை விமானியாக மாறி அந்த வேலையின் மூலம் கிடைத்த வருமானத்தை தனது பெயரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு வெளியான ஒரு காமெடி படத்தின் மூலம் நடிகராக மாறிய இவர், தனக்கு பிடித்தமான தலைவர் (ஸ்பென்ஸர் டிரேஸி) மற்றும் பிடித்தமான பீரின் (பட்வெய்ஸர்) பெயர்களை ஒன்றிணைத்து ‘பட் ஸ்பென்ஸர்’ ஆக திரையுலகில் தடம் பதித்தார்.

1960-ம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலிய மொழி படங்களுடன் பல்வேறு ஹாலிவுட் படங்களிலும் பிரபல காமெடி நடிகராக வெற்றிக்கொடி நாட்டினார். சார்லி சாப்ளின், லாரல் – ஹார்டி போன்ற உலகின் தலைசிறந்த காமெடி நடிகர்களின் பட்டியலில் இவரது பெயரும் மிககுறுகிய காலத்தில் இடம்பிடித்தது.

குறிப்பாக, டெரன்ஸ் ஹில் என்பவருடன் பட் ஸ்பென்ஸர் இணைந்து நடித்த 20-க்கும் மேற்பட்ட படங்கள் உலக சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமைந்திருந்தது. ‘பைவ் மேன் ஆர்மி’ என்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை தமிழில் தேவர் பில்ம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘அஞ்சாத சிங்கங்கள்’ படத்தில் கராத்தே மணி ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தே கால்ட் ஹிம் புல்டோஸர்’ (They Call Him Bulldozer ), ‘ஐ ஆம் பார் தி ஹிப்போபோடாமஸ்’ ( I’m For the Hippopotamus), ‘ஹூ பைன்ட்ஸ் எ பிரன்ட் பைன்ட்ஸ் எ டிரெஷர்’ (Who Finds a Friend Finds a Treasure) போன்றப் படங்கள் ஐரோப்பிய நாடுகளையும் கடந்து உலகம் முழுவதும் வாழும் மக்களை சிரிக்க வைத்தன.

1990-க்கு பின்னர் தொலைக்காட்சி சீரியல்களின் பக்கம் கவனத்தை திருப்பிய பட் ஸ்பென்ஸர், பல சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதி நடித்ததுடன், சில சீரியல்களை சொந்தமாகவும் தயாரித்தார். 2005-ம் ஆண்டு அரசியலில் நுழைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். தனது வாழ்க்கை அனுபவங்களை கடந்த நூலாக எழுதி கடந்த 2011-ம் ஆண்டு வெளியிட்டார்.

விமானப்பயண நிறுவனம் மற்றும் துணி மில் ஆகியவற்றை நடத்திவந்த பட் ஸ்பென்ஸர்(86), இத்தாலி தலைநகரான ரோமில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார்.

Leave a comment