வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல -மஹிந்த ராஜபக்ஷ

469 0

73657236

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல. அவர் அரசியலுக்காகவே இவ்வாறு பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் ஊடகங்களுடன் நேற்று நடைபெற்ற நேர்காணலின் போது வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி பற்றி வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, ‘மக்கள் தமது மீன்பிடி, விவசாய, தொழில் மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்காகவே வீதியில் இறங்கினர். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாததால் அவர்களின் கவனத்தை திருப்பவே வடமாகாண முதலமைச்சர் இனவாத கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். நான் அறிந்த சி.வி. விக்னேஸ்வரன் இனவாதியல்ல. அவர் அரசியல் லாபத் திற்காகவே இவ்வாறு பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இவர்களுக்கு மக்களுக்கு கூற எதுவும் இல்லை. ஏதும் தொழில் வழங்கியுள்ளனரா, வீதி அமைத்துள்ளனரா, இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களை மூடி அவர்களை மீள்குடியேற்றியுள்ளனரா, தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்காவது தீர்வு வழங்கியுள்ளனரா? மீனவர்களுக்கு கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியுமா?

30 வருடங்கள் கடலுக்கு செல்ல முடியாதிருந்த மக்களுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தோம். இருந்தும் இன்று அவர்களுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாதுள்ளது. விவசாயிகளுக்கு தமது அறுவடையை விற்க முடியவில்லை. பெரிய வெங்காயத்தை விற்க முடியாதுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சரிடமும் அரசாங்கத்திடமும் தீர்வு இல்லை. அதனால் இனவாதத்தையோ வேறு எதையாவது பரப்பி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கின்றனர். மக்களின் கவனத்தை திருப்புவதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். அந்த மக்களுக்கு போராட்டம் செய்ய உரிமையிருக்கிறது.

மீனவர்கள் தமது பிரச்சினையை முன்வைப்பதற்காகவும் விவசாயிகள் தமது பிரச்சினையை வெளியிடவும், இளைஞர்கள் தொழில் கேட்டுமே இந்த போராட்டத்தில் இறங்கினார்கள். மக்கள் தமது பிரச்சினைகளுக்காகவே போராட்டம் நடத்தினார்கள். அரசாங்க ஊழியர்களுக்கு வாழ முடியாத நிலை இருப்பதால் அவர்கள் வந்தார்கள். மக்கள் இனவாத நோக்கத்தில் போராட்டம் நடத்தவில்லை. அது வேறு பக்கம் திசை திருப்பப்பட்டது.

வடமாகாண சபை தேர்தலை நானே நடத்தினேன். வடமாகாண முதலமைச்சரின் கருத்து பாரதூரமானது. அதனை அங்கீகரிக்க முடியாது. அதற்காக வடமாகாண சபை தேர்தலை நடத்தியது குறித்து நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. அது வடபகுதி மக்களின் உரிமையாகும். அந்த உரிமையை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். முன் கூட்டி தேர்தல் நடத்தாதே என பலர் என்னிடம் கூறினார்கள். தோற்பது தெரிந்தும் நான் தேர்தல் நடத்தினேன் ஏனென்றால் அவர்களுக்கு தமது உரிமையை வழங்க வேண்டியிருந்தது என்றார்.