இனப்பாகுபாடு இன்றும் இருக்கிறது-முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

994 0

c-v-vதமிழ் சிங்கள இனப்பாகுபாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற காரணத்தினால் புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் நாட்டு ஊடகம் ஒன்றின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது இனப்பாகுபாடு தொடர்கின்ற காரணத்தினால் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸாரில் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகருக்கு மேலாக பொலிஸார் உயர்நிலையில் இல்லை என்று சுட்டிக்காட்டிய வடக்கு முதலமைச்சர் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் ஒரே ஒரு தமிழர் மட்டும் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகராக கடமையாற்றுகின்றார் என்றும் குறிப்பிட்டார்.

உதவிப் பொலிஸ் அத்தியேட்சகராக கடமையாற்றுகின்றவரும் விரைவில் பணியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
எனவே தற்போதைய ஆட்சி நிலையிலும் இனப்பாகுபாடு தொடர்கின்றது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசுகள் தமிழ் மக்களுக்கு சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சம உரிமையோடு நடாத்தப்பட்ட காரணத்தினால் அக்காலத்தில் ஆங்கிலத்தில் கல்வி கற்று போட்டிப் பரீட்சைகளில் தேர்ச்சியடைந்து வளமான எதிர்காலத்தை தமிழ் மக்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இனப்பாகுபாடு காட்டப்படவில்லை.

1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பே இனப்பாகுபாடு தொடங்கியது.

மொழி ரீதியாக நஞ்சூட்டப்பட்ட காரணத்தினால் சகல செயற்பாடுகளிலும் தமிழ் மக்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டது.

குறிப்பாக கல்வியில் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்ட காரணத்தினால் பல தமிழ் இளைஞர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்க முடியாமல் தடுக்கப்பட்டார்கள்.

எனவே பெரும்பான்மை இனம் மீளவும் தமிழ் மக்களுக்கு சமஉரிமை கொடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலமே புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு தீர்வைக் கொடுக்க முடியும் என்றும் வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.