தமிழரின் வளங்களை அழிக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கை-ஸ்ரீதரன்

436 0

sritharanதமிழர் தாயகப் பிரதேசத்தின் கனிய வளங்களை அழிக்கும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வரலாற்றுத் தொன்மைமிக்க பூநகரி பிரதேசத்தில் கபானா வகை சுற்றுலா விடுதியை அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு பிரதேச சபையை ஆளுநர் பணித்திருப்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே ஸ்ரீதரன் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

பூநகரி கௌதாரிமுனை மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து பிரதேச சபை செயலாளருடன் குறித்த பகுதிக்கு அவர் நேரடியாக விஜயம் செய்திருந்தார்.

மாத்தறை பகுதியை சேர்ந்த நபர்கள் பூநகரில் விடுதியை கட்டுவதற்கான காணி உரிமையை எவ்வாறு பெற்றனர் என்பது தொடர்பிலும் அக் காணிகளுக்குரிய மூல ஆவணங்கள் யாருடையவவை என்பதற்கும் தெளிவான பதில் இல்லை எனவும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதேச சபை மற்றும் மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த விடயத்தை ஆளுநர் கையில் எடுத்திருப்பதன் நோக்கம் என்ன எனவும் அவர் வினவியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலமே இன அழிப்பு இடம்பெறுவதாகவும் தமிழர்களின் விடுதலை போராட்ட வரலாற்றை கூட பூநகரி மண் பேசும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடுதலை போராட்டத்தில் மடிந்த மாவீரர்களின் கனவுகள் நிறைவேற, தமிழர்கள் ஒர் அணியாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.