கிளிநொச்சி, இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று நியமித்தார்.
யாழ். பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எஸ். சன்முகநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவையே ஆளுநர் நியமித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி பெய்த கடும் மழையின் போது இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு சடுதியாக உயர்ந்த போதும் குளத்தின் வான்கதவுகள் உரிய நேரத்தில் திறக்கப்படாது விட்டதனால் இந்த வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டது எனத் தெரிவித்து அதற்கான விசாரணைகளை முன்னெடுக்கவே இவ் விசாரணை குழுவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று (28) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பான விசேட கூட்டத்தின் போது வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சி தலைவர் தவராசா இரணைமடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவென்றை அமைக்குமாறு கோரியிருந்தார்.


