கிளி பிரமந்தனாறு பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது!

25858 0

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டம் பிரமந்தனாறு பகுதியில் KN/58 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 539 குடும்பங்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நேற்று 27/12/2018 நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரால் 27 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வலி வடக்கு கிராமமான மயிலிட்டி தற்போது பகுதியளவில் விடுவிக்கப்பட்டு மீள் குடியேற்றத்திற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அகதிகளாக்கப்பட்டிருந்த மயிலிட்டி மக்கள் இன்றும் முழுமையாக மீள் குடியேறாத நிலையில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் வகையில் புலம்பெயர் வாழ் மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய உறவுகளின் நிதிப்பங்களிப்புடன், மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் இரண்டு நாட்களாக பருத்தித்துறை முதல் மயிலிட்டி வரையான பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி மூலமாக கிடைத்த உதவிகளையும் ஒருங்கிணைத்து இந் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் (27/12/2012) சுகவீனம் காரணமாக சாவடைந்திருந்த மயிலிட்டியைச் சேர்ந்த றசியசிங்கம்-றம்மியா’வின் ஆறாவது ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் சார்பில் தயார்செய்யப்பட்டிருந்த இருநூறு உலருணவுப் பொதிகளும் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினூடாக வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

பிரமந்தனாறு பகுதி KN/58 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 539 குடும்பங்களுக்கான தலா ஆயிரம் ரூபா பெறுமதியிலான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளும், மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பால்மா பெட்டி – 95, கர்ப்பிணித் தாய்மாருக்கான பால்மா பெட்டி – 16, குழந்தைகளுக்கான கோல்டன் கௌவ் பிஸ்கட் பெட்டிகள் – 210, திரிபோசா மா பைக்கற் (750g) – 230 , சானிட்டரி நாப்கின் EVA – 312, நுளம்பு வலைகள்- 30, குழந்தைகளுக்கான நுழம்பு கூடைகள் – 25, தண்ணீர் போத்தல்கள், உடைகள் என சுமார் எட்டு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுதியான நிவாரணப் பொருட்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து அவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்த சில உறவுகள் தமது சார்பில் அவர்களால் முடிந்தளவிலான பொருட்களையும் இவர்களூடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment