நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவு தினம்!

516 0

 நாவலடி

ஆழி பேரலையில் காவு கொள்ளப்பட்ட  உன்னத உயிர்களுக்கு இன்று சரியாக காலை   9.05 மணியவில் அஞ்சலி  செலுத்தப்பட்டுள்ளது.

பேரலையின்போது உயிர்களை நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்து வழிபாடுகளில் ஈடுபடும் நிகழ்வு இன்று  காலை 9.5க்கு நாவலடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவுத் தூபியில்  இடம்பெற்றுள்ளது . 

 குறித்த நாவலடி பகுதியில் ஆகக் கூடிய  568 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்த நிலையில் குறித்த பகுதிகளிலுள்ள ஆலயங்களில் நினைவு அஞ்சலி விளக்கேற்றி பூசைகள் இடம் பெற்றுள்ளது. 

உடுத்திறை 

ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டதன் 14 ஆண்டு நினைவேந்தல் உடுத்துறை சனாமி நினைவாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொது ஈகை சுடரை வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச.அரியகுமார் ஆகியோர் ஏற்றியதை தொடர்ந்து சுனாமியால் உயிரிழந்தோருக்கு  சம நேரத்தில் ஈகை சுடரேற்றப்பட்டது.

முன்னதாக சுனாமியால் மரணிந்த 1002 பேரது பெயர்களும் பொறிக்கப்பட்ட நினைவுக்கல் திரைநீக்கப்பட்டது.

இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண முன்னாள் உறுப்பினருமான m.kசிவாஜிலிங்கம் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இன்றைய சுனாமி நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான உறவுகள் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அம்பாறை

ஆழிப்பேரலை பேரனர்த்தின் 14ஆவது நினைவு தினம் இன்று(26) அம்பாறை மாவட்டத்தில் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்டது.

அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் இன்று காலை 9.05 மணிக்கு இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் ஒரு அங்கமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயலுடன் இணைந்து சுனாமியின் 14 ஆவது வருட நினைவு தினத்தினை நடத்தியது.

 பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுனாமயினால் மரணமடைந்தவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலியும், பிரார்த்தனையும் இடம்பெற்றது.

வவுனியா

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது ஆழிப்பேரலை நினைவிடத்தில் இன்று ஆழிப்பேரலை நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நினைவு தினத்தில் ஆழிப்பேரலை பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கான 2 நிமிட மௌனப்பிரார்த்தனை இடம்பெற்றதுடன் வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன்  நினைவுச்சுடரை ஏற்றியிருந்தார்.

இதனையடுத்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வட மாகாணசபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன்,

வவுனியா நகரசபை உறுப்பினர்கள், செயலாளர், கிராம சேவையாளர்கள், முன்பள்ளி மாணவர்கள் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் சுடரேற்றியதுடன் நினைவுத்தூபிக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நிதியுதவியும் செய்து வைக்கப்பட்டிருந்தது.

 முல்லைத்தீவு

கடந்த 26.12.2004 அன்று ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டு  உயிர்நீத்த உறவுகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்  இன்று (26) புதன்கிழமை முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக  இடம்பெற்றது .

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில்  முல்லைத்தீவு பங்கு சுனாமி நினைவாலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பங்குதந்தை அருட்பணி அன்ரன்ஜோர்ச் தலைமையில்  இன்று  காலை 8 மணி முதல்  விசேட ஆராதனைகளும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் அருட்தந்தையர் அருட்சகோதரிகள் அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் சுனாமியில் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க  அஞ்சலி செலுத்தினர். 

இந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவில் மாத்திரம் 3000 பேருக்கு அதிகமானோர் கொல்லபட்டதோடு பலர் காணாமலும் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

பாசிக்குடா

பாசிக்குடா

பாசிக்குடா

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில்  ஆழிப்பேரலை கடற்கோள் அனர்த்தத்தினால் தமது இன்னுயிரை நீத்த 512 பேர் உட்பட இலங்கையில் பலியான சுமார் 41000 மக்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

பாசிக்குடா கிராம அபிவிருத்தி சங்கத்தினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது கோறளைப்பற்று தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் மற்றும் கிராம சேவகர் க.கிருஷ்ணகாந் மற்றும் உயிர் நீத்தவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டு நினைவுச் சுடர்களை ஏற்றி வைத்தனர்.

மன்னார்

ஆழிப்பேரலையில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை லூசியா ம.வி பாடசாலையில் இன்று புதன் கிழமை காலை 9.25 மணியளவில் தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டது.

இதன் போது ஆழிப்பேரலையினால் உயிர் நீத்த மக்களுக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம் பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சார்வ மதத்தலைவர்கள்,மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி சிவசம்பு, மாவட்ட அனார்த்த முகாமைத்து பிரிவின் உதவிப்பணிப்பாளர் திலீபன்,கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்,கிராம அலுவலகர்கள்,கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு உயிர் நீத்த மக்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து  அஞ்சலி செலுத்திய நிகழ்வு  நாவலடி, கல்லடி புதுமுகத்துவாரம் போன்ற இடங்களில் இன்று புதன்கிழமை 26ஆம் திகதி காலை 9.10 மணியளவில் இடம்பெற்றது

இவ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை, பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் மற்றும் மாநகர சபை ஆணையாளர், மாநகர பிரதி முதல்வர், மாநகரசப உறுப்பினர்கள், உயிர்நீத்தோரின் உறவுகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த 2014 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூசைகளும் கிரியைகளும் விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றன.

Leave a comment