மக்கள் திலகமென்ற மாந்தநேயன் – மா.பாஸ்கரன் யேர்மனி.

379596 0

மக்கள் திலகமென்ற மாந்தநேயன்
மானுட விடுதலையென்பது ஆசைகளில் இருந்து விடுபட்டு அகத்தூய்மை அடைவதைக் குறித்து நிற்கிறது. அகத்தூய்மையென்பது குமுகாய நோக்கோடு உண்மையின் பக்கம் நின்று உழைப்பதன் வழியாக அடையக்கூடியது. அதன்வழியாக மாந்தரது அகங்களில் உலகவாழ்விலிருந்து மறைந்தாலும் மறையாது நிலைபெறக் கூடியதுமாகும். அதனாற்றான் உயிர்பிரியும் வேளைவரை முதல்வராக முடிசூடாமன்னனாக மக்கள் திலகம் வாழ்ந்தார் தமிழீழ விடுதலையென்பது தமிழினத்தின் இருப்புக்கானதென்பதை தமிழீழத்தின் தமிழ்த் தலைமைகளைக் கடந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கநிலையைப் புறம்தள்ளிச் சிந்தித்த ஒரு மானிடனாக எம்முன்னே என்றும் இருப்பவராக எம்.ஜீ.ஆர் என்று மூன்றெழுத்தாற் தமிழக வரலாற்றில் மட்டுமன்றித் தமிழீழ வரலாற்றிலும் பொறிக்கப்பட்ட மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரனவர்களே உள்ளார்.


தமிழீழ மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு அயலகத் தலைவராக விளங்குகின்றமை ஒன்றே அவர் தமிழீழ விடுதலையின்பாற்கொண்ட தெளிவை உணர்த்துகிறது. இன்றுவரை இட்டுநிரப்பிவிட முடியாத ஒரு ஆளுமையாகவும் மக்கள் தொண்டனாகவும் இருந்த எம்.ஜீ.ஆர் அவர்களின் மறைவு தமிழீழமக்களுக்கும் ஒரு கறுப்புநாளே. தமிழீழத்தின் தேவையையும் அதனை அடையக்கூடிய தலைமையையும் இனங்கண்டு தனது ஆட்சியைக்கூடச் சிந்திக்காது தார்மீக ஆதரவை எந்தத் தயக்கமோ பயமோ இன்றி வழங்கியமையின் வாயிலாகத் தமிழரது விடுதலைப்போராட்டம் அன்றிருந்த களச்சூழலில் முழுவிச்சோடு முகிழ்ந்தமை ஒரு வரலாறாகவே பதிவாகியுள்ளது.


அப்படிப்பட்ட ஒருவர் வாழ்ந்த, அவரால் உருவாக்கப்பட்ட கட்சியிலே இருப்பவர்கள் உட்படத் தமிழகத்திலே இன்று கட்சியரசியலுக்கான பேசுபொருளாகத் தமிழீழ விடுதலையும் தமிழீழ மக்களையும் நோக்குவதை எப்படி அழைப்பதென்றே புரியவில்லை. தார்மீக ஆதரவையும் தமிழீழத் தேவையையும் சரியாக இனங்கண்டதோடு மத்திய அரசினது போக்கைத் திணிக்காது மதிநுட்பத்தோடு கையாண்ட ஒரு தமிழகத்தலைவராகவும் எம்.ஜீ.ஆர் அவர்களே விளங்குகின்றார். இன்று தமிழகத்தின் எல்லாக் கட்சிகளும் பொத்தாம் பொதுவாகத் தமிழீழம் என்று தேர்தல் காலக்கோசமாகக் கையிலெடுப்பதும் தேர்தல் முடிந்தவுடன் கைவிடுவதுமான போக்கிலே இருக்க எந்த ஆரவாரமும் இன்றிக் கைகொடுத்த வள்ளளலாக எம்.ஜீ.ஆர் அவர்களே திகழ்கின்றார்.


தமிழீழம் குறித்தான நோக்குநிலையென்பது தமிழகம் கட்சியரசியலைக்கடந்து இன்றுவரை சிந்திக்கத் தலைப்படாத போக்கு தமிழீழத்துக்கு மட்டுமன்றித் தமிழகத்தக்கும் ஆபத்தானது. உலகப்பெரும் சனநாயக நாடு, ஒன்றிணைந்த ஆட்சிமுறை, ஒற்றுமை என்று கூப்பாடு போட்டவாறு மொழிவழி மாநில உரிமைகளை மறுதலித்துத் தமிழகத்தை நசுக்குவதிலே மத்தியிலே இருப்பவர்கள் குறியாக இருப்பதைக் காவிரி முதல் நீட் தேர்வு வரையான நகர்வுகள் சுட்டி நிற்கின்றன. இங்குதான் தமிழகத் தலைமைகள் கட்சியரசியலைக் கடந்து ஒரு பொதுத்தளத்திற்குத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நகரத்த வேண்டிய தேவையை உணரவேண்டும். தமிழீழ விடுதலை என்பது உலகத் தமிழினத்தின் நிமிர்வுக்கானதாகவும், உலகப்பரப்பில் தமிழருக்கான ஒரு நாடாக அமையும்போது மட்டுமே தமிழினம் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், அதற்கொரு நெருக்கடி எழும்போது தட்டிக்கேட்கவும் எட்டித்தூக்கிவிடவும் சாத்தியமாகும். ஏனென்றால் தமிழருக்கான ஒரு அரசாங்கம் அமைய வேண்டுமெனில் அதற்கொரு நாடு அவசியமானது.


தமிழீழ விடுதலைப்போராட்டமானது இலங்கையின் இறைமை, பிராந்திய ஒற்றுமை என்ற வகைப்பாட்டிற்குள் நசுங்கிப் போவதைத் தடுப்பதற்காகக் கொடுத்தவிலை தமிழினத்தால் ஈடுசெய்ய முடியாதது என்பதையும், முள்ளிவாய்காலில் இன்னும் தமிழினத்தின் குருதிக்கறைகள் காயவில்லை என்பதையும், தமிழ் இளையோர் முதல் முதியோர்வரை ஒரு இலட்சத்து நாற்பதாறாயிரத்து அறுநூற்றியெழுபத்தொன்பது உயிர்களைக் காணாமற் கடந்த பத்து ஆண்டுகாளாகத் தமிழினம் தேடிக்கொண்டிருக்கிறது என்பதையும், அனைத்துல அரங்கிற்குத் தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தை நகர்த்துவதற்காக் கொடுத்தவிலையை ஈடுசெய்தலென்பது தமிழீழத்தை விடுவிப்பதே என்பதையும் கட்சியரசியலைக் கடந்து தமிழகம் சிந்திக்க வேண்டுமென்பதை மனங்கொள்ள வேண்டும்.
மனித வாழ்வென்பது அடிமைத்தளையகன்ற வாழ்வாகும். தமிழகத்தின் திரைத்துறையாகட்டும் அரசியலாகட்டும் எம்.ஜீ.ஆர் என்ற மூன்றெழுத்தை, அது எப்போதும் பதிவுசெய்துகொண்டே நகரும். தமிழீழமும் அப்படியே. சுயநலமற்ற ஒரு மக்கள்தலைவனாக விளங்கியவரின் முப்பத்தோராவது நினைவுநாளைக் கடந்து செல்லும் இவ்வேளையிற் தமிழகத்திலே அவராற் தோற்றுவிக்கப்பட்ட கட்சியாளர்களாவது அவரது தமிழீழம் குறித்த எண்ணக்கருவைச் சிந்தைகொள்ள வேண்டும். இவ்வேளையிற் தமிழீழ உறவுகளும் அவர் நினைவேந்தி நிற்கின்றனர்.
மா.பாஸ்கரன்
யேர்மனி.

Leave a comment