பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!

277 0

பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க கோரி சென்னையில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்-வியாபாரிகள் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க கோரியும் சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் நாடு வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா பொருளாளர் கோவை தங்கம், வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், ராம்குமார், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், ஆர்.எஸ்.முத்து, விருகை முத்து, தாமோதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் த.வெள்ளையன் பேசியதாவது:-

தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை தொழிலை ஒழுங்கு படுத்தி பிளாஸ்டிக் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் பல லட்சம் பிளாஸ்டிக் தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்வி குறியாகும் நிலையை தடுக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தடை உத்தரவை விலக்கிகொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment