விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி

479 0

201606261428329890_14-District-Secretaries-fighting-against-Vijayakanth_SECVPFசட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியை தழுவியது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
தேர்தலுக்கு முன்னதாக நடந்த கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள்.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டனர். இதையடுத்து அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். மாவட்டம் வாரியாக கட்சியின் ஒவ்வொரு அணியில் இருந்தும் நிர்வாகிகளை வரவழைத்து கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த நிலையில் மேலும் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கட்சி தொடங்கியது முதல் இதுவரையில் நடந்த முக்கிய சம்பவங்களை குறிப்பிட்டு கடிதமாக எழுதியுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (சென்னை மேற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), டாக்டர் வி.இளங்கோவன் (தர்மபுரி), என்.தினேஷ்குமார் (திருப்பூர் வடக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), துரை காமராஜ் (பெரம்பூர்),

எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), பி.சம்பத் குமார் (நாமக்கல்), பாலு (திண்டுக்கல்), முத்துகுமார் (மதுரை மாநகர்), கே.ஜெய பால் (திருநெல்வேலி), டி.ஜெகநாதன் (கன்னியா குமரி கிழக்கு), க.ராமசாமி (புதுக்கோட்டை), ஆகியோர் பகிரங்கமாக கடிதம் எழுதி விஜயகாந்துக்கு அனுப்பி யுள்ளனர். கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உங்களை சினிமாவில் பார்த்தும், நீங்கள் பேசிய வசனங்களையும் நம்பித்தான் ரசிகர்கள் ஆனோம். மன்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் ஆகட்டும் அல்லது தே.மு.தி.க. ஆரம்பித்த பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள் ஆகட்டும் யாருமே உங்களை சினிமாவில் ரசிக்காமல் உங்களோடு இணையவில்லை.

கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால் தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பு நடந்த சிலவற்றை கூறுகிறோம் தே.மு.தி.க. பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என சொல்வதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தே.மு.தி.க. இருக்கிறது.

2006 தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டோம். அதில் 34 வேட்பாளராவது கட்சியில் தற்போது இருக்கிறார்களா? 2009-ல் 40 பேர் எம்.பி. தொகுதியில் தனித்து போட்டியிட்டோம். அதில் 4 வேட்பாளராவது தற்போது கட்சியில் இருக்கிறார்களா? 2005-ல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்ட செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தே.மு.தி.க. என்ற மாபெரும் கட்சியை காலியாக்கி விட்டீர்கள்.

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தே.மு.தி.க. மாநாடு நடத்துங்கள். நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்திற்கும் மாநாடு நடத்தியதற்கான பணம் கொடுக்கவில்லை.

உங்கள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததற்கு நஷ்ட ஈடாக 9 கோடி வாங்கினீர்கள். அண்ணியின் பிடிவாதத்தால் ஆட்சியில் இருந்த தி.மு.க.வை எதிர்த்தீர்கள். நாங்களும் காரணமே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு தி.மு.க.வை எதிர்த்தோம்.

உங்கள் சுயநலத்திற்காக 10 வருடமாக தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் நாங்களும் எதிர்த்தோம். 2016-ல் வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை உடைத்த கதையாக தி.மு.க.வோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள்.

ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப் பெரிய உதவி செய்தீர்கள். 2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? கட்சி பெயரில் டிரஸட் உள்ளது. ஆனால் கட்சிக்கும், டிரஸ்டிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.

தே.மு.தி.க. டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக் கொண்டு, கட்சிக்கு வருகின்ற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்த டிரஸ்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு தெரியும்.

கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்க்ள என்று கேட்டு இருக்கிறீர்களா.

தே.மு.தி.க. கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால் நீங்க உங்கள் குடும்பத்தினக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது.  உங்களுக்கு பல ஆண்டு காலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்பாடாமல் உங்கள் குடுபத்தினருக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீர்களே இது நியாயமா, அதன் விளைவு 10½ சதவீதம் இருந்த வாக்கு 2½ சதவீதமாகி போனது.

தி.மு.க. நம்மால் தோற்று விட்டதல்லவா, தி.மு.க.வால் ஜெயிக்க முடிஞ்சுதா? என்று தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.

இத்தகை பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளாக தே.மு.தி.க.வில் இருக்க வேண்டுமா? நீங்களே தே.மு.தி.க. கட்சியை கலைத்து விட்டு எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment