3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது!

251 0

பேஸ்புக் பயனர்கள் 3 கோடி பேரின் பிறந்த தேதி, கல்வி, உள்பட பிற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக்கின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் மூலம் இந்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு டிரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்ஸ்பெர்க் இந்த விவகாரத்தில் தவறு நடந்து விட்ட உண்மையை ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில், பேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் தற்போது திருடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக் பயணர்களின் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் 1.5 கோடி  நபர்களின்  மற்ற தகவல்களை ஹேக்கர்கள் திருடியதாக  பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும், 1.4 கோடி  மக்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் திருட ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை அந்நிறுவனம் சரிசெய்து வரும் நிலையில், மீண்டும் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment