பாகிஸ்தானில் மனித உரிமை செயற்பாட்டாளர் கைது – சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டனம்

16731 0
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்கவா, பலூசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூன் இன பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்காக போராடி வரும்  மனித உரிமை செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில் என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் என்பவருக்கும் ரஷிய நாட்டின் மிக உயரிய விருதான ‘அன்னா ஸ்டெபனோவ்னா பொலிட்கோவ்ஸ்க்காயா விருது’ கடந்த 2017-ம் ஆண்டு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,  கைபர் பகதுங்கவா மாகாணத்துக்குட்பட்ட சுவாபி நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குலாலாய் இஸ்மாயில் உள்பட 19 பேருக்கு எதிராக அனுமதி இல்லாமல் திரள்வது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், லண்டன் நகரில் இருந்து இன்று விமானம் மூலம் இஸ்லாமாபாத் நகரை வந்தடைந்த  குலாலாய் இஸ்மாயிலை பாகிஸ்தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு சர்வதேச பொது மன்னிப்பு சபையான ஆம்னெஸ்ட்டி இன்ட்டர்நேஷனல் கண்டனம் தெரிவித்துள்ளது. எவ்வித முன்நிபந்தனையும் இன்றி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment