உலகிலேயே அதிகம் கேலிக்குள்ளாக்கப்படுவது நான்தான் – ட்ரம்ப் மனைவி உருக்கம்!

224 0

‘உலகிலேயே அதிகமாக கேலிக்குள்ளாக்கப்படும் நபர் நான்தான்’ என அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், கடந்த வாரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனியாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. அப்போது, கென்யாவில் அவர் ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், உலகிலேயே நான்தான் அதிகமாக கேலிக்குள்ளாக்கப்படும் நபர் எனத் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலின் சிறிய தொகுப்பு நேற்று வெளியாகி, உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அதைத் தைரியமாக வெளியில் சொல்லும் நோக்கில் சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட #metoo அமைப்புக்கு ஆதரவளித்து, மெலானியா பேசியுள்ளார். அதில், ‘ மீ டூ அமைப்பின் பெண்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் வெளியில் தெரிய வேண்டும். அவர்களுக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒருவர்மீது புகார் கூறும் பெண்கள், தகுந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டே புகார் தெரிவிக்க வேண்டும். புகார்களை வெறும் வாய் வார்த்தையாகக் கூறும்போது, அதை ஊடகங்கள் தங்களுக்கு ஏற்றார்ப்போல மாற்றிவிடுகின்றன. அது சரியானதாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தில் ஒருவரை கிண்டல் செய்வதற்கு எதிராக, ‘முன் முயற்சி’ (be best initiative) என்ற பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார். இது பற்றிக் கூறிய அவர், ‘இந்த உலகத்தில் அதிகம் கேலிக்குள்ளாக்கப்படும் நபர் நான்தான். மக்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதை எதிர்த்தே என் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளேன். நம் குழந்தைகளிடம், சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஒரு கல்வியாகக் கற்பிக்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பிறகு, இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நிலை வந்தால், அப்போது இது அவர்களுக்கு உதவும்” என்று கூறியுள்ளார்.

Leave a comment