‘பல முறை பிரேக் இல்லாத பேருந்தை இயக்கியிருக்கிறேன்!

194 0

பேருந்துகள் பராமரிப்பில்லை, பல முறை பிரேக் இல்லாத பேருந்தை ஓட்டியிருக்கிறேன். குறைகளைச் சுட்டிக்காட்டினால் சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம் எனக் கேட்டுள்ள ஓட்டுநர் விஜயகுமார் மீண்டும் பணி வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.

அரசுப் பேருந்து சரியாக பராமரிக்காதது பற்றி காணொலிக் காட்சியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டுப் பேசிய பேருந்து ஓட்டுநரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.

 

பொதுவாக பராமரிக்கப்படாத பேருந்துகள் விபத்தில் சிக்க அதிக வாய்ப்புண்டு. அதை இயக்கும் ஓட்டுநர்கள் படும் துயரம் வெளியில் சொல்ல முடியாத ஒன்று. பராமரிப்பு இல்லாத பேருந்து இயக்கப்படும்போது அது பொதுமக்களின் உயிருக்கே எமனாக மாறும் வாய்ப்பு அதிகம்.

இதனால் உயிரிழப்பால் பணியாளர் பாதிக்கப்படுவது போன்ற பல காரணங்கள் உண்டு. ஆகவே, போக்குவரத்து தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கைக்கு அதிகாரிகள் காது கொடுக்க வேண்டும், தரமில்லாத ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி போடக்கூடாது என்ற கோரிக்கை எப்போதும் உண்டு.

பழனியில் தரமில்லாத பராமரிக்கப்படாத பேருந்து குறித்து துணிச்சலாகப் பதிவிட்ட ஓட்டுநர் ஒருவரின் காணொலி வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பழனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (34). திருச்சி பழனி சரகத்தில் அரசுப் போக்குவரத்து பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார்.

விஜயகுமார் வெளியிட்டுள்ள காணொலியில், கடுமையான மழையில் நின்றபடி பேசும் அவர் தன்னை பழனி கிளை ஓட்டுநர் என்று கூறுகிறார். பக்கவாட்டு ஷட்டர் இல்லாததால் தெப்பலாக நனைந்துள்ள அவர் 4 மணிநேரமாக பேருந்தை இயக்கி வருகிறேன். இதேபோன்று நனைந்தபடி ஓட்டி வருகிறேன். எனக்கு காய்ச்சல் வந்து படுத்தால் யார் பொறுப்பு? இதுபோன்றுதான் பராமரிப்பில்லாத பேருந்துகளைத் தருகிறார்கள். பிரேக் பிடிப்பதில்லை, ஷட்டர் இல்லை, பேருந்து முழுவதும் ஒழுகுகிறது. இதுபோன்ற பேருந்தைக் கொடுத்து ஓட்டச் சொல்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார்.

ஆனாலும் நிறுத்தாமல் ஓட்டிவந்து பயணிகளை இறக்கிவிட்டதாகக் கூறும் விஜயகுமார், பேருந்தின் அவல நிலையைக் காணொலியாக வெளியிட, அது வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவியது. இதையடுத்து ஆத்திரமடைந்த அதிகாரிகள் அரசுப் பேருந்து ஓட்டுநர் விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

விஜயகுமார் நியாயமான விஷயத்தைத்தானே கூறினார், அவரை எப்படி சஸ்பெண்ட் செய்யலாம் எனப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. உண்மையைச் சொன்ன ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்ததற்கு போக்குவரத்து ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனது சஸ்பெண்ட் ஆர்டருடன் பழனி பணிமனை வந்த விஜயகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“நிறைய பேருந்துகள் பராமரிப்பில்லாமல்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. பிரேக் இல்லை, ஷட்டர் இல்லை.  இங்கு லாக் ஷீட் என்று ஒன்று உள்ளது. அதில் இதுகுறித்துப் பல முறை எழுதியிருக்கிறேன். நிலைய மேலாளரை அழைத்துச் சொல்லியிருக்கிறோம். ஏஇயை அழைத்துச் சொன்னோம். நிறைய பேருந்துகள் பராமரிப்பில்லாமல்தான் ஓடுகிறது. கேட்டால் ஆள் இல்லை, ஸ்பேர்ஸ் இல்லை என்று சொல்வார்கள். பிரேக் இல்லை, பிரேக் இல்லாமல் எப்படி வண்டியை ஓட்ட முடியும்?

விபத்துகளுக்கு பிரதான காரணமே பிரேக் இல்லாததுதான். விபத்து இனியும் தொடரத்தான் செய்யும். பலமுறை நான் பிரேக் இல்லாமல் ஓட்டியிருக்கிறேன். பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போதே பிரேக் இல்லாமல் போன் செய்து பேருந்து நிலையத்துக்கு உடனே மெக்கானிக்கை அழைத்து வாருங்கள் என்று கூறி இங்கு வந்து சரி செய்துவிட்டு மதுரை சென்றுள்ளேன்.

தொடர்ச்சியாக புகார் அளித்தும் இதுபோன்ற பேருந்துகளையே இயக்கக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆதங்கத்தில் பதிவிட்டேன். இதை வைத்து என்னைப் பணியிடை நீக்கம் செய்வது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்”.

இவ்வாறு ஓட்டுநர் விஜயகுமார் தெரிவித்தார்.

Leave a comment