சிவபூமி சிங்கள பூமியாகுமா?

2 0

ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது.

ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ஆலயங்கள் சுதந்திரத்திற்கு பிந்தைய காலம் முதல் பிற மத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் 2009இற்குப் பின்னர் இப் போக்கு தீவிரமடைந்துள்ளது. ஈழத் தமிழர்கள் உரிமைக்கான போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அவர்களின் மொழி, பண்பாடு, சமயத்தை அழிக்கும் முயற்சிகளை ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டவர்கள் கடுமையாக நிறைவேற்றி வருகிறார்கள்.

அண்மையில் முகப்புத்தகத்தில் குளோபல் தமிழில் வெளியான நேர்காணல் ஒன்றில் ஈழம் என அழைக்கப்பட்டதை குறித்து ஒருவரால் கிண்ணடலாக பதிவொன்று போடப்பட்டிருந்தது. ஈழம் எங்கிருக்கிறது என்று நண்பர் ஒருவர் கிண்டல் செய்திருந்தார். இலங்கை அரசின் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது ஈழம் என்ற சொல். இலங்கை அரசால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களில் ஈழம், ஈழத்து சிவாலயங்கள், ஈழத் தமிழ் இலக்கிய வரலாறு என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் சிலருக்கு ஈழம் என்றால் எங்கிருக்கிறது என்று தெரியாத ஒரு குறைபாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.

என்ன செய்வது? எதில் நக்கல் செய்து பொழுதை கழிப்பதென தெரியாதவொரு அற்பமான நோய். தமிழீழத்தை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் ;ஈழம் என இலங்கைத் தீவு காலம் காலமாக அழைக்கப்படுவது வரலாறு. இதை திட்டமிட்டு மறைத்துக் கேலி செய்வதை வெறும் நோயெனவும் கடக்க இயலாது. ஒரு புறத்தில் பௌத்த பேரினவாதிகள் ஈழத்தின் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். மறுபறுத்தில் சிலர் ஈழத்தின் சுதேச பண்பாட்டு அடையாளங்களை மறைத்தழித்து வருவதன் மூலம் பேரினவாதிகளுக்கு ஒத்தாசை செய்கின்றனர்.

ஈழத்தை சிவபூமி என்றார் திருமூலர். அந்தளவுக்கு சிவாலயங்கள் நிறைந்த தீவாக ஈழம் காணப்பட்டிருக்கிறது. ஈழத்தின் நான்கு திசைகளிலும் மையத்திலும் சிவாலயங்கள் உண்டு. இந்த சிவாலயங்கள் ஈழத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருந்து வருகின்றன. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் திருமூலர் வாழ்ந்தவர் என்றும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் அவர் என்றும் சொல்லப்படுகின்றது. அவர்தான் ஈழத்தை சிவபூமி என்றார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், மற்றும் சம்பந்தர் தமது பதிகங்களில் ஈழத்தின் ஈச்சரங்களான திருகோணேச்சரம் மற்றும் திருக்கேதீச்சரம்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர்.

ஈழத் தமிழ் மக்கள் இந்த தீவின் பூர்வீக குடிகள் என்பதற்கு பஞ்ச ஈச்சரங்களே சாட்சிகளாக உள்ளன. இந்த ஈச்சரங்களை சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்புடுகின்றன. தெற்கில் மாத்தறையில் இருந்த, தென்னாவரம் எனப்படும் தொண்டீச்சரம் இன்று முற்றாக அழிந்துபோயுள்ளது. (மாத்தறை மாதுறை என அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.) அங்கிருந்த சிவலிங்கம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் தெற்கு முனையின் மாத்தறை கடலோரத்தில் அமைந்திருந்தது. இத் திருக்கோயில் தேவன்துறை கோயில் ;நாக ரீச நிலாக் கோயில் ( இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தமது சிரசில் பிறை நிலவைச் சூடியிருப்பதனால், அவர் ;சந்திர மௌலீஸ்வரர் என்னும் திருப்பெயரைக் கொண்டிருக்கின்றார். அதனாலேயே இப்பெயர்) என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இதைப்போலவே கொழும்பு இரத்மலானையில் உள்ள நந்தீஸ்வரம் ஆலயமும் போர்த்துக் கீசரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டது. அது ஈழத்தின் ஈச்சரங்களில் ஒன்று என்ற வரலாறே இன்று மறைக்கப்பட்டுவிட்டது.

அந்நியர்களால் அழிக்கப்பட்ட இந்த ஆலயங்களின் வரலாற்றை ஒரு கதையாக பேசுவதைப் போல எதிர்காலத்தில் ஈழத்தின் எந்த ஈச்சரங்களுக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது. எனினும் இப்போது, எஞ்சிய ஈச்சரங்களை நோக்கி சிங்கள பௌத்த மயப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. முன்னேச்சரம் ஆலயம்மீது பௌத்த பிக்குகளின் கடுமையான தலையீடுகள் காணப்படுகின்றன. அந்த ஆலயத்தின் வழக்காறுகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்.

ஈழத் தலைநரான திருகோணமலையில் அமைந்திருக்கும் திருகோணேச்சரம் ஆலயத்தின் வாசலில் விகாரையும் புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலையின் பல்வேறு பகுதிகளிலும் புத்தர்சிலைகள் குடியேற்றப்பட்டுள்ளன. கந்தலாய் என்ற தமிழர் பூர்வீக நிலமும் இன்று சிங்கள பௌத்தமயமாகிவிட்டது. அத்துடன் மன்னாரில் கேதீச்சர ஆலய சூழலிலும் விகாரைகள் புத்தர் சிலைகளை திணித்து ஆக்கிரமிக்கும் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இங்கு ஆலயத்திற்குரிய பல ஏக்கர் காணிகளை அபகரிக்கப்பட்டுள்ளது.

இதைப்போலவே, யாழ்ப்பாணத்தில் நகுலேச்சரம் ஆலயம் அமைந்துள்ள பகுதி, நெடுங்காலமாக இலங்கை இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஈழத்தின் தொன்மை மிகுந்த, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பௌத்த சிங்களமயமாக்கல் முயற்சிகள் ஒரு போர் நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்படுகின்றன. மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி சிவபூமியை சிங்கள பூமியாக்கும் ஒரு சூழ்ச்சிகரமான நடவடிக்கையே.

குருந்தூர்

அண்மைய காலத்தில் முல்லைத்தீவில் குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலையை ஆக்கிரமிக்க பௌத்த பேரினவாதிகள் கங்கனம் காட்டியுள்ளனர். எனினும் முல்லைத்தீவு இளைஞர்கள் இந்த விடயத்தில் தொடர்ந்து விழிப்பாய் இருப்பதுடன் அவர்களை விரட்டியடித்து மண்ணின் அடையாளம் காக்கும் நடடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான சூழலிலேயே ஈழத் தமிழ் மக்களின் சைவ ஆலயங்கள் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அவைகள் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களை புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்படவேண்டும். அத்துடன் அப் புனித பிரதேங்களில் பிற மத அடையாள திணிப்புக்களை முன்னெடுப்பதை தடை செய்ய வேண்டும். தலதா மாளிகளையில் ஒரு சைவ ஆலயம் ஒன்றையோ, சைவ கடவுளின் சிலை ஒன்றையோ நிறுவ இயலுமா? ஆனால் சைவ ஆலயங்களில் புத்தர் சிலைகளை சொருகுவது என்பது மிகவும் இயல்பாக இடம்பெறுகின்றது. இராணுவ அதிகாரம் கொண்டும், அரச அதிகாரம் கொண்டும் பேரினவாத அதிகாரம் கொண்டும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வடக்கில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பலவற்றை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றை அரசிதழ் ஊடாக அறிவித்துள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இராணுவத்தினர் பல்வேறு இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து, விகாரைகளை கட்டி எழுப்பியுள்ள நிலையில் எஞ்சிய நிலத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஆக்கிரமிப்பு அடையாளங்களை நிறுவ முயற்சிகளை மேற்கொள்ளுகின்றதா? வடக்கில் பல இடங்களில் பாரிய விகாரைகளை கட்டி பௌத்தமயப்படுத்த நல்லாட்சி அரசு திட்டங்களை வகுத்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

வெடுக்குநாறி மலை

தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கவும், அவர்களின் உரிமையை மறுக்கவும், அவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கவும் புத்தரையும் ஒரு ஆயுதமாக சிங்கள தேசம் கையாள்கிறது. இதற்கான பாரிய முயற்சிகளில் நல்லாட்சி அரசு என சொல்லிக் கொள்ளும் இன்றைய அரசும் முயல்கிறது. இந்த அநீதிகள் யாவற்றுக்குமாக தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய நிலையில் தற்போது மீண்டும் அந்த வேலைகளை தமிழ் மண்ணில் அரசாங்கம் மேற்கொள்ளுவது தமிழர்களை மீண்டும் ஆயுதம் ஏந்த வைக்கும் செயல்.

தமிழ் மக்கள் மதவாதிகளல்ல. அவர்கள் அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். சக மதங்களை மதிக்கும் பின்பற்றும் போக்கு கொண்டவர்கள். பௌத்தத்தைக்கூட முன்னைய காலத்தில் பின்பற்றியவர்கள். ஆனால் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் சைவ ஆலயங்களையும் வைசத்தையும் அழிக்க முற்படும் முயற்சிகள் நடப்பதால் தமிழ் மக்களால் தமது வழிபாட்டு மற்றும் பண்பாட்டு முறைகளையும் ஆயுதங்களாக கையாள வேண்டிய அவசியம் ஏற்படடுள்ளது.

எதற்காக இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனரோ, எதற்காக சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றனவோ, அதற்காகவே சைவ ஆலயங்கள் மற்றும் தமிழர் சூழலில் பௌத்த அடையாளங்களை திணிக்கப்படுகின்றன. ஈழக் கனவை சிதைத்துவிடுவதும் தமிழர்களை இத் தீவில் ஒடுக்கி அழித்து விடுவதுமே இதன் இலக்கு. எந்தக் காரணங்களுக்காக தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்களோ, அந்த ஆக்கிரமிப்புக் காரணங்களே, இனத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளைகளாகவும் இனப்பிரச்சினையை தீர்த்துக் கட்டும் ஆயுதங்களாகவும் வழியாகவும் இலங்கை அரசால் பயன்படுத்துகிறது .

தீபச்செல்வன்

Related Post

இலங்கையின் மோசடியும், ஜெ கொடுத்த பதிலடியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 12, 2017 0
இலங்கையில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தை அறிய மூத்த வழக்கறிஞர் சகோதரி மனோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு மக்களின் கருத்தைக் காட்டி சர்வதேசத்தின் முகத்தில்…

விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? – நிலாந்தன்

Posted by - July 2, 2017 0
கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது.

ஆசிரியர் தினமும் ஈழத்து ஆசிரயர்களும்!

Posted by - October 6, 2016 0
மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.…

தமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்! – நிலாந்தன்

Posted by - April 22, 2018 0
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக…

லெப்.கேணல். குமரப்பா உட்பட 12 வேங்கைகளின் வீரமரணமே ராஜீவ்காந்தி படுகொலையின் முதல் விதை!

Posted by - March 2, 2017 0
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த…

Leave a comment

Your email address will not be published.