துவரங்குறிச்சி அருகே அடுத்தடுத்து 2 ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து – சென்னை டிரைவர் பலி

219 0

துவரங்குறிச்சி அருகே 2 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னை டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரியில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டது. அதில் 26 பயணிகள், 2 டிரைவர்கள் உள்பட 29 பேர் இருந்தனர். நேற்று அதிகாலை திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சை ஓட்டி சென்ற சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஏனோக் (வயது 31) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். துவரங்குறிச்சி போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து பற்றி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி 13 பயணிகளுடன் சென்ற ஆம்னி பஸ் ஒன்று, அந்த இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பில் மோதி எதிர்சாலையில் சென்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துகள் குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி அருகே கடந்த 2 நாட்களில் மட்டும் இதுவரை 5 ஆம்னி பஸ்கள் விபத்தில் சிக்கியுள்ளன. ஒரே இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு சாலை வழவழப்பு தன்மையுடன் அமைக்கப்பட்டு இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

எனவே உயிர்ப்பலி ஏற்படுத்தும் இந்த சாலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment