தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இன்று மாலை 4.30 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் 8 பேர், குறுகியகால புனர்வாழ்வளித்தாவது தம்மை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கண்டி மற்றும் மகசீன் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில், குறித்த அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, சகல அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள இப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்பினர், மனிதநேயமுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் என சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், அவர்களின் வழக்குகளை ஒவ்வொன்றாகவே விசாரிக்க முடியுமென சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். எனினும், வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படும் தமது வழக்கை இனியும் தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இவ்விடயத்தில் அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.