மாலத்தீவு அதிபர் தேர்தல் – எதிர்கட்சியை சேர்ந்த இப்ராகிம் முகமது வெற்றி பெற்றதாக தகவல்

212 0

மாலத்தீவில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலத்தீவில் சமீப காலமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் உள்ளது. அங்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்பை அதிபர் யாமீன் அப்துல் கயூம் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. அதிபர் நிலைப்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் எஞ்சிய நீதிபதிகள் முந்தைய தீர்ப்பை திரும்பப்பெற்றனர்.

இந்த நிலையில் அங்கு நேற்று அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூம், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வருகிற முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போடியிட்டார்.

நேற்று காலை காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு 92 சதவிகித வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Transparency MV

@TransparencyMV

Our quick count results indicate that Ibrahim Mohamed Solih has won the 2018 Presidential Election by a decisive margin. We call on all stakeholders to maintain an environment conducive for a peaceful transfer of power.

இதனால், மாலத்தீவு ஜனநாயக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக வீதிகளில் மாலத்தீவு தேசிய கொடியை அசைத்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனினும், தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒரு வார காலத்திற்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் கட்சிகள் இந்த ஒரு வார காலத்திற்குள் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த கால அவகாசம் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என வெற்றி பெற்ற எதிர்கட்சி அச்சம் தெரிவித்துள்ளது. தனது கருத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை கைது செய்து சிறையில் அடைத்த வரலாற்றை உடையவர்  தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment