விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்

308 0

சேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், நோயாளியின் மோதிரத்தை வைத்து அது தன் கணவர் என அறிந்தார். அவர் இறந்ததை அறிந்து உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார் .

“சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன், தனது மோட்டார் சைக்கிளில் புளியம்பட்டிக்கு சென்றுவிட்டு, மேச்சேரிக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பச்சனம்பட்டி அருகே வந்த போது சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே நேற்று வழக்கம் போல அவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்திருந்தார்.

சீனிவாசனுக்கு சிகிச்சை அளித்த குழுவில் அவரது மனைவி சிவகாமியும் ஒருவர். விபத்தில் சிக்கியவரின் உடலில் இருந்த ரத்த கறையை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது விபத்தில் சிக்கியவரின் விரலில் தி.மு.க. சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரம் இருப்பதை பார்த்து சிவகாமி திடுக்கிட்டார். அது தன்னுடைய கணவரது மோதிரம் போல் இருக்கிறதே என சந்தேகம் அடைந்தார்.

பின்னர் தலையில் பலத்த காயம் அடைந்து இருந்ததால் அவரது தலையில் சுற்றி இருந்த துணிகளை அகற்றி முகத்தை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். விபத்தில் சிக்கியது தனது கணவர் சீனிவாசன் என்பதை அறிந்து கதறி அழுதார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள், விபத்தில் சிக்கிய சீனிவாசனை பரிசோதித்த போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கணவரது உடலை கட்டிப்பிடித்து அவர் கதறி அழுதார். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்”

 

Leave a comment