பெரியார் சிலை மீது காலணி வீச்சு- சென்னையில் திடீர் பரபரப்பு

374 0

சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் உள்ள அவரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர். சிலைக்கு அருகில் பெரியாரின் புகைப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், திடீரென தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி பெரியார் சிலை மீது வீசி எறிந்தார். பின்னர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவரை உடனடியாக போலீசார் பிடித்து கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இதுபோன்ற செயல்களை ஆரம்பகட்டத்தில் ஒடுக்கவேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், சிலையை அவமதித்தவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Leave a comment