பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன்? – வீரமணி கேள்வி

3384 0

கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் கண்ணோட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கினார், ஆனால் பெரியார் நினைவு சமத்துவபுரங்களும், அங்கு திறக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைகளும் தமிழக அரசால் பராமரிக்கப்படாதது வருந்தத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கடைசி வரை வாழ்ந்து மறைந்தும் மறையாமல் நம் அனைவரது நெஞ்சங்களிலும் நிறைந்தவராகிவிட்ட நமது முத்தமிழ் அறிஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஜாதி ஒழிப்பின் அமைதிப் புரட்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பற்பல விடங்களில், ஒன்றியங்களில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கி இந்தியாவிற்கு ஜாதி ஒழிப்புக்கான வழிகாட்டினார்.

பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் உள்ள பெரியார் சிலைகளை தமிழக அரசு பராமரிக்காதது ஏன்?

ஒவ்வொன்றிலும் தந்தை பெரியார் அவர்களது சிலையை நிறுவியதோடு அந்நாளைய முதல்வர் கருணநிதியோ, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினோ திறந்து வைத்தார்கள்.

அந்த பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் இன்றுள்ள அதிமுக அரசினால் சரியான பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்றன. பெரியார் சிலைகளும் பல இடங்களில் வண்ணம் தீட்டப்படாமலும், தூய்மைப்படுத்தப்படாமலும் இருப்பது அதிமுக அரசுக்கு ஒருபோதும் பெருமையளிப்பதாகாது.

இதில் உடனடியாக தமிழக அரசு தக்க கவனம் செலுத்திட வேண்டும்; தயவு செய்து இதில்அரசியல் பார்வை வேண்டாம்.

பெரியார் விழாவை குடும்பம் குடும்பமாகக் கொண்டாடுவோம்!

எப்படி இருந்தாலும் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை தந்தை பெரியாருக்கு அனைவரும் கொண்டாடி மகிழும் இவ்வேளையில் திராவிட இயக்கத்தவர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், குறிப்பாக திராவிடர் கழகம், திமுக, மதிமுக போன்ற அமைப்புகளும், ஏனைய பகுத்தறிவாளரும் ஆங்காங்கே திரண்டு, பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அப்பகுதி மக்களுக்கு இனிப்பூட்டி, வாய்ப்புள்ள இடங்களில் ஜாதி – தீண்டாமை ஒழிப்பு தெருமுனைக் கூட்டங்களைப் போன்ற பிரச்சாரத்தை ஒருசில மணி நேரம் செய்து திரும்புவது சாலச் சிறப்பாகும்.

இதை செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி 23 வரை ஒரு வாரத்திற்கு வாய்ப்பு – வசதிக்கேற்ப ஒரு நாளில் பிரச்சாரம் செய்ய முன் வர வேண்டுமென அன்புடன் அனைவருக்கும் வேண்டுகோள் விடுகிறோம்.

ஒத்தக் கருத்துள்ள அனைவரும், பெரியார் கொள்கை பற்றாளர்களும், ஜாதி ஒழிய வேண்டும் என்ற லட்சியத்தில் நம்பிக்கை உள்ள பலரும் – ஜாதி, மத, வேற்றுமை பாராது குடும்பம் குடும்பமாகத் திரண்டு இந்த எளிய ஜாதி ஒழிப்புப் பணியை – மாலை அணிவித்து செய்ய வேண்டுமென அனைத்து முக்கிய பொறுப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்’’ என வீரமணி கூறியுள்ளார்.

Leave a comment