3000 அரசுப் பள்ளிகளை மூடுவது மாபெரும் அவமானம்: அன்புமணி கண்டனம்

23 0

மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி மற்றும் போதிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மாணவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளிலேயே கல்வி வழங்குவது தான் அரசின் கடமை எனும் நிலையில், அக்கடமையைச் செய்யாமல் பள்ளிகளை இழுத்து மூட தமிழக ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

 

தமிழ்நாட்டில் 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 810 அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு கடந்த ஆண்டே தமிழக அரசு தீர்மானித்திருந்தது. பாமக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்தத் திட்டத்தை தமிழக அரசு தற்காலிகமாக கைவிட்டிருந்தது. எனினும், 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், அப்பள்ளிகளை மூடிவிட்டு அதில் தற்போது பயின்று வரும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. புதுடெல்லியில் கடந்த ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகக் கூட்டத்தில் தமிழக அரசின் இம்முடிவை மாநில பள்ளிக் கல்வித்துறை செயலர் முறைப்படி தெரிவித்துவிட்டதாக தனியார் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதவிர 15-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 1950 பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளுக்கும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் 9 முதல் 12 வரை உள்ள பள்ளிகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இப்போது இரு திட்டங்களையும் இணைத்துள்ள மத்திய அரசு, அத்திட்டத்தின் கீழ் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க முடியாது என்று கூறிவிட்டது. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்தும்படி மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு 1053 பள்ளிகளும் பிற பள்ளிகளுடன் இணைக்கப்படவுள்ளன. அதேபோல், நிதி ஒதுக்கீடு செய்யப்படாத 1950 பள்ளிகளையும் நடத்த முடியாத நிலை விரைவில் ஏற்படும். அதனால் அந்தப் பள்ளிகளும் மூடப்படுவது உறுதியாகி விட்டதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர். கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதாக தொடர்ந்து பெருமை பேசி வரும் தமிழக அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிக்கூடங்களை மூடுவது மிகப்பெரிய அவமானமாகும்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறி பள்ளிக்கூடங்களை மூடுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்களில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் பேருக்கும் மேல் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து அரசுப் பள்ளிகளில் குறைந்தால் அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் சரி செய்வது தான் மக்கள் நல அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக அரசோ, அதைச் செய்யாமல் மிகவும் எளிதாகப் பள்ளிகளை மூடி பொறுப்பை கை கழுவுகிறது.

2005-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது. அதற்காக அந்த மதுக்கடைகளை அரசு மூடிவிடவில்லை. மாறாக, மது விற்பனை குறைந்ததற்கான காரணங்களை கண்டறிவதற்காக ‘ஸ்வாட்’ (SWOT -Strengths, Weaknesses Opportunities, Threats) ஆய்வை அரசு மேற்கொண்டது. அதில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு மது வணிகத்தை தமிழக அரசு அதிகரிக்கச் செய்தது. நாட்டைச் சீரழிக்கும் மது வணிகம் குறைந்தவுடன், அதைச் சரி செய்வதற்காக ‘ஸ்வாட்’ ஆய்வை மேற்கொண்ட அரசு, நாட்டின் முன்னேற்றத்திற்கான கல்வி வளர்ச்சிக்கு அத்தகைய ஆய்வு எதையும் செய்யாமல் பள்ளிக்கூடங்களை மூடத் துடிக்கிறது. தமிழக அரசு படிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது… குடிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் காமராசர் முதல்வராக இருந்த போது 16,000 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இப்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி அரசுப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டால், அது அப்பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே அமையும். ஒரு காலத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகள் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு தனியார் பள்ளி இருக்கும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இது தான் 50 ஆண்டு திராவிடக் கட்சிகளின் சாதனை ஆகும். தனியார் பள்ளிகள் தழைத்தோங்குவதற்காகவே தமிழக அரசு இவ்வாறு செய்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவதற்குப் பதிலாக பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தி அவற்றைத் தொடர்ந்து நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும் என எச்சரிக்கிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

Related Post

ஐகோர்ட்டு தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது- திருமாவளவன்

Posted by - July 8, 2018 0
சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது – தினகரன் ஆவேசம்

Posted by - November 12, 2018 0
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது என துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். 

செய்யூரில் 2-வது விமான நிலையம்!

Posted by - June 22, 2018 0
செய்யூரில் 2-வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கிராமங்களின் வரைபடங்களை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் தற்போது சர்வதேச விமான…

முரசொலி பவள விழா: பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம்

Posted by - August 1, 2017 0
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவள விழாவிற்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடி கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.

மகளை காப்பாற்ற சிறுத்தையின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்தேன்: நெல்லை பெண் பேட்டி

Posted by - May 28, 2018 0
வால்பாறையில் மகளை கடித்த சிறுத்தையை தாய் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published.