எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: தகவல்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

222 0

எம்பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் பற்றிய முழுமையான தகவல்களை தாக்கல் செய்யு மாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான உத்தரவில், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அவர்கள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்கவும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணபத்திரத்தில், ‘அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் அந்தஸ்து குறிப்பிடப்படவில்லை என்றும் சிறப்பு நீதிமன்றத்துக்கு 1,233 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்து தகவல்களை அக்.10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a comment