மதுரையின் புதிய அடையாளமாக மாறுகிறது பெரியார் பஸ் ஸ்டாண்ட்!

272 0

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இத்திட்டத்தில் மீனாட்சி கோயிலை சுற்றிய 3100 ஏக்கரில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

நவீனமாகும் பஸ் ஸ்டாண்ட் : பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி பார்க்கிங், சுற்றுலா, வைகை மேம்பாடு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த 131 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்கள் இணைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். தற்போதைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் இடத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம், வணிக வளாகம் அமைகின்றன. இரு பஸ் ஸ்டாண்ட்களையும் பிரிக்கும் ரோடு மீது பாலம் அமைகிறது. பழங்காநத்தத்திலிருந்தும், சிம்மக்கல்லிலிருந்தும் வாகனங்கள் பாலம் வழியாக செல்ல முடியும்.

கடைகளை காலி செய்ய நோட்டீஸ் : ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மாநகராட்சி இடத்தில் கடைகள், விடுதி, டூவீலர் பார்க்கிங் செயல்படுகின்றன. இவற்றை காலி செய்தால் தான் பணிகளை துவக்க முடியும். அதற்கு ஏற்ப வரிபாக்கிகளை செலுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. காலி செய்யவும் நோட்டீஸ் வழங்கப்படும்.

டூரிஸ்ட் பிளாசா : இங்கு தற்போதுள்ள சைக்கிள் ஸ்டாண்ட்டில் சுற்றுலா பணிகளுக்கான தகவல்கள், சுற்றுலாவை மேம்பாடுத்துவதற்கான வசதிகளை உள்ளடக்கிய ‘சுற்றுலா பிளாசா’ அமைகிறது. 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இங்கிருந்து மீனாட்சி கோயிலுக்கு பேட்டரி கார்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து மதுரையிலுள்ள பாரம்பரிய சின்னங்கள் பொலிவுப்படுத்தப்படவுள்ளன.

விரைவில் பணிகள் : திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. புராதன சின்னங்களை மேம்படுத்துதல் மற்றும் கலாசார மையம் அமைக்க 63 கோடி, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி கார் பார்கிங் 28 கோடி, வைகை கரை மேம்படுத்த 93 கோடி மற்றும் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கும் 130 கோடி ரூபாயில் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.கமிஷனர் அனீஷ்சேகர், ” சில திட்டங்களுக்கான டெண்டர் செப்., 20 முடிகிறது. ஒரே நேரத்தில் அனைத்து பணிகளும் துவங்கும். ஒவ்வொரு பணி முடிப்பதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

 

Leave a comment