வடகொரியாவை கண்காணிக்க ஜப்பானுக்கு உதவியாக ரோந்து விமானங்களை அனுப்பிய ஆஸ்திரேலியா, நியூசிலாந்து!

330 0

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை மீறி நடுக்கடலில் கப்பல் விட்டு கப்பலில் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வடகொரியாவை கண்காணிக்க ஜப்பானுக்கு உதவியாக 3 ரோந்து விமானங்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அனுப்பியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது.

இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு அந்நாட்டின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகள் ஏற்றுமதி மீது கடுமையான பொருளாதார தடைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில்  தாக்கல் செய்து, ரஷியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது.

இதைத்தொடர்ந்து, தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பும் நடந்து முடிந்தது.

கிம் ஜாங் அன் உடனான சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் கூறுகையில், வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், அணு ஆயுதங்களை முற்றிலுமாக வடகொரியா அழித்த பின்னரே தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். எனவே, தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும் என கூறியிருந்தார்.

ஆனால், வடகொரியா இந்த தடைகளை பொருட்படுத்தாமல் கடந்த வருடம் போலியான பாதைகள் மற்றும் தந்திரங்களை உபயோகித்து சுமார் 200 மில்லியன் டாலர்களை ஏற்றுமதியில் வருவாயாக அந்நாடு ஈட்டியுள்ளது. கடந்த மாதம் பசிபிக் பெருங்கடலில் ரஷ்யாவை சேர்ந்த 6 கப்பல்களில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் வடகொரிய கப்பலுக்கு மாற்றப்பட்டது எனும் குற்றச்சாட்டை சாட்டிலைட் புகைப்படங்களுடன்  அமெரிக்கா முன்வைத்தது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பொருளாதார தடைகளை சட்டவிரோதமாக மீறும் வடகொரியாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் மூன்று கடற்படை ரோந்து விமானங்கள் இன்று ஜப்பானுக்கு அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில், ‘ அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் வடகொரியா சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தைகளை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், சர்வதேச கட்டுப்பாடுகளை வட கொரியா ஏற்றுக்கொள்ளும் வரை, ஐ.நா.சபையின் பொருளாதாரத் தடைகளை முழுமையான அமல்படுத்துவது முக்கியம்’ என கூறியுள்ளார்.

வட கொரியா, அதன் கூட்டாளிகளுடன் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மந்திரி கிரிஸ்டொபர் பைன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் இரண்டு ஏ.பி – 3சி வகை கடற்படை ரோந்து விமானங்களும், நியூசிலாந்தின் பி – 3கே2 ரோந்து விமானமும் ஜப்பானில் உள்ள கதேனா விமானப்படை தளத்தில் நிறுத்தப்படும். ஜப்பானுக்கு உதவியாக நடுக்கடலில் கப்பல் விட்டு கப்பலில் வடகொரியா நடத்தும் சட்டவிரோதமாக வர்தகத்தை கண்காணிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a comment