மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர் மீது தாக்குதல்!

259 0

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு கர்ப்பிணி தாய் ஒருவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை வைத்திய காரணங்களினால் இறந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை குறித்த தாயை பார்வையிட வந்த கணவர் மற்றும் உறவினர் ஒருவரும்,பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியை தாக்கியுள்ளதோடு,பாதுகாப்பு உத்தியோகஸ்தரையும் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து குறித்த இருவரையும் உடனடியாக மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வைத்திய அதிகாரி மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று வைத்தியசாலை வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் வைத்தியசாலைக்கு வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் உதவி பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment