நெருங்கும் ஆபத்து விழிக்க வேண்டிய தருணம் – காரை துர்க்கா

1066 0

ஆகா புல்லாங்குழழ் இசை அருமை யாழ் இசை மிக அருமை எனக் கூறுவார்களாம் தமது குழந்தைச் செல்வங்களின் மழழை மொழி கேட்காதவர்கள். இவ்வாறாக பிள்ளைப் பேறு அற்றவர்களின் சோக நிலையை சொல்லுக்குள் அடக்க முடியாது.

கடந்த மார்ச் மாதம் 9ம் 10ம் மற்றும் 11ம் திகதி என மூன்று தினங்களில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய சுகாதார நலக் கண்காட்சி நடைபெற்று உள்ளது. இந்தக் கண்காட்சியில் பல்வேறுபட்ட மருத்துவ ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வுகள் தனியார் மருத்துவ நிறுவனங்களால் வழங்கப்பட்டன. குறிப்பாக கருத்தரித்தல் மையங்கள் ஊடாக கருத்தரித்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த மூன்று நாட்களில் யாழ் குடாநாட்டைச் சேர்ந்த சுமார் 2000 பெண்கள் (தம்பதிகள்) கருத்தரித்தல் தொடர்பான இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று உள்ளனர். இதன் மூலம் குழந்தைப் பேறு இன்மை தொடர்பான பிரச்சினை உணரப்பட்டு உள்ளது. அத்துடன் மூன்று தினங்கள் என நாட்கள் வரையறுக்கப்பட்டடையால் கணிசமானோரால் பங்கு பற்ற முடியாத நிலை உள்ளதெனவும் ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

குறித்த கண்காட்சியில் இந்தியாவைத் தளமாகக் கொண்ட கருத்தரித்தல் மையங்களே காணப்பட்டமையால் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றோர் இந்தியா சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் குறித்த ஏதாவது நோய் தொடர்பாக வைத்திய ஆலோசனை பெற முன் அனுமதிக் கட்டணம் சராசரியாக 1500 ரூபாவாக உள்ளது. இந்ந நிலையில் இந்தியா சென்று சிகிச்சை பெறுவது தொடர்பாக பாரிய செலவினங்களை எவ்வாறு சராசரிக் குடும்பம் செலுத்தும் வலு உடையோராக இருக்கும்.

யாழ் குடாநாட்டில் குழந்தைப் பேறு இன்மை என்பது பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதை குறித்த கண்காட்சி ஊடாக புரிந்து கொள்ள முடிகின்றது. குறித்த சிகிச்சைக்கான தேவை பாரிய அளவில் உணரப்பட்டுள்ளது என அந்தக் வைத்தியக் கண்காட்சியில் இலவச கருத்தரித்தல் ஆலோசனைகளை வழங்கிய 35 வருடங்களாக இந்தத் துறையில் சேவையாற்றும் அனுபவமுள்ள இந்தியா பிரசாத் குழந்தையின்மை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கருவாக்கல் சிறப்பு வைத்திய நிபனர் தெரிவித்து உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் கருத்தரித்தல் தொடர்பான சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் அதையும் தாண்டி அதி நவீன சிகிச்சைகளின் தேவைகள் உணரப்பட்டு உள்ளது. அத்துடன் இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

குறிப்பாக கருப்பையில் இரத்தக் கட்டிகள்இ சினைப்பையில் இரத்தக்கட்டிகள்இ கருப்பை அமைப்பில் வித்தியாசம் போன்ற பிரச்சினைகளே அதிக அளவில் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

மலடி மலடியென்று மாநிலத்தார் ஏசாமல்
மலடிக் கொருகுழந்தை மாயவனார் தந்த பிச்சை
இருளி இருளியென்று இந்நிலத்தேர் ஏசாமல்
இருளிக் கொருகுழந்தை ஈஸ்வரனார் தந்த பிச்சை
பிள்ளை இல்லையென்று பெருந்தவங்கள் செய்தேனே
மைந்தன் இல்லையென்று மாதவங்கள் செய்தேனே
வெந்தமாத் தின்றால் விரதம் அழியுமென்று
பச்சை மாத்தின்று பகவானைக் கைதொழுது
வெள்ளிக் கிழமை விரத மகத்துவத்தால்
பிள்ளைக் கலிதீர்க்கப் பிறந்த நவரசமோ?
பரமசவன் வாசலிலே பலநாள் தவமிருந்து
பரமசிவனார் தந்த பைங்கிளியே கண்வளராய்
தூரத்தக் கோயிலுக்கு தூண்டாவிளக் கேற்றுவிப்பார்
காதகத்துக் கோயிலுக்கு காணிக்கை போட்டுவிப்பார்
குளிக்கக் குளம் வெட்டி கும்பிடக் கோயில்கட்டி
படுக்கமடங் கட்டுவிப்பார் பாக்கியவான் உங்களப்பா.

இந்த நாட்டார் பாடல் குழந்தைப் பேறு இன்மையால் தவிக்கும் பெண்னின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. குழந்தை இன்மையால் தனது ஆற்றாமையையும் கிடைக்கப் பெற்றால் என்ன செய்வேன் எனவும் ஆதங்கத்துடன் அந்தப் பெண்மணி தெரிவிப்பதையும் குறித்த நாட்டார் பாடல் அழகாக சித்தரிக்கின்றது.

நமது சமூகத்திலும் குழந்தைப் பாக்கியம் கிட்டாத பெண்னை மலடி மலடி என வேண்டாத வார்த்தையால் வேண்டுமென்றே தூற்றுவோரை நாம் அன்றாடம் காண்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் கூட இருந்து அன்பாக ஆறுதல் வார்த்தை கூறி ஆரோக்கியப்படுத்த வேண்டிய கணவனே மலடி என அக்கிரமமாக தூசித்தலைப் பார்க்கின்றோம்.

பொது வைபவங்களில் நெத்திக்கு நேரே சுட்டிக் காட்டுவோர் அவளை எதிர்காலங்களில் அவ்வாறான வைபங்களுக்கு வருகை தர முடியாத அளவுக்கு ஒதுக்கி வைக்கின்றனர். சிலர் குறித்த பெண்னுக்கு பிள்ளைப் பேறு இல்லை என நன்கு தெரிந்தும் உங்களுக்கு குழந்தை குட்டிகள் இல்லையா? உங்கள் வயிற்றில் புழு பூச்சிகள் உண்டாகவில்லையா என வீம்புக்கு கேட்கின்றனர்.
இந்த வார்த்தைகள் அவள் மனதைப் துப்பாக்கிச் சன்னம் போல் பதம் பார்ப்பதை பட்டு உணராதவர்கள். வீணாக வேட்டு வைப்பார்கள். போதாக் குறைக்கு போட்டுத் தாக்குவார்கள். போட்டுக் குடைவார்கள். இந்த நிலை தொடரின் குறித்த பெண் தனிமைப்பட்டு விடுவாள்.

பேசா மடந்தை என ஊமை ஆகிவிடுவாள். கூவாத குயில் எனவும் ஆடாத மயில் எனவும் இந்த வையகத்தில் நான் ஆகி விட்டேனே என தனக்குள் தவறான கணக்குப் போடுவாள்.
கூட்டத்தோடு சேர பின்னடிப்பாள். தனிமையை நேசிப்பாள். அந்தத் தனிமையே காலப்போக்கில் ஒருவித சுயவெறுப்பை ஏற்படுத்தும். அது நிம்மதி ஒன்றைத் தேடின் தற்கொலை வரை இட்டுச் செல்லும். முன்பு மரணங்கள் மலிந்த பூமியில் வாழ்ந்த ஈழத்துச் தமிழ்ச் சமூகம் இன்று தற்கொலைகள் நிறைந்த பூமியில் வாழ்கின்றது.
வீதி விபத்து மரணங்கள் அன்றாட நிகழ்வுகள் போல அமைந்து உள்ளன. ஆகவே பிறரது தற்கொலைக்கு நாம் காரணமானவர்களாக இருக்காமல் அவர்களுக்காக ஆறுதலாக அன்பாக ஆதரவாக ஆற்றுப்படுத்தல் அளிப்பவராக மாறுவோம்.

இதற்கு அடுத்தபடியாக தமிழர் பிரதேசங்களில் நடைபெற்ற கொடும் ஆயுதப் போரின் விளைவுகள் பலருக்கும் பலவிதமான மன அழுத்தங்களை அளவற்ற வகையில் அள்ளி வழங்கி விட்டது.
மன அழுத்தத்தின் பங்கு கருத்தரித்தலின் பங்கை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அமைந்து உள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
சீதனம்இ தகுதிக்கு ஏற்ற மாப்பிள்ளை இன்மை மற்றும் பிற காரணங்களால் முதிர் கன்னிகளாக வாழ்வோர் எண்ணிக்கையும் ஏனைய தமிழ் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. பல்வேறு காரணங்களால் உரிய வயது கடந்து திருமணம் புரிவோருக்கும் குழந்தைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவுகள் கூட அரிதாகவே உள்ளது.
அத்துடன் தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவி என இருவரும் பணிக்குச் செல்லல். அதனால் ஏற்படும் பணிச்சுமை குழந்தைப் பராமரிப்பு மற்றும் பொருளாதாரச் சுமை போன்ற காரணங்களால் குழந்தை பெற தகுதியான தம்பதிகள் கூட ஒன்று அல்லது இரண்டு என குறைத்துக் கொண்டு விட்டனர்.

ஏலவே போரின் தாக்கத்தால் பல லட்சம் யாழ்ப்பாணத்து மக்கள் தொகை புலம் பெயர்ந்தோர் என்ற வட்டத்துக்குள் வந்து விட்டனர். பலர் தினசரி பல்வேறு காரணங்களால் புலம் பெயர்கின்றனர்.
ஆகவே இவ்வாறான குழந்தைப் பேறு இன்மை வற்றும் நிலையில் உள்ள யாழ் சனத்தொகையை மேலும் வறுமை ஆக்கி விடும். உதாரணமாக அன்றைய மருத்துவ ஆலோசனை பெற வந்த 2000 தம்பதிகளுக்கும் ஒற்றைக் குழந்தை இருப்பின் யாழ்ப்பாண சனத்தொகை 2000 என்ற எண்ணிக்கையில் அதிகரித்திருக்கும் அல்லவா?
ஏனைய பிரதேசங்கள் மற்றும் நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பு பிரச்சினை. ஆனால் தமிழ்ச் சமூகத்துக்கு சனத்தொகை இன்மை பிரச்சினை. ஏனெனில் போரில் தமிழ்ச் சமூகம் லட்சம் பேரை வேள்விக்கு இரை ஆக்கியது. பலரை புலம்பெயராக்;கியது.

ஆகவே இது அழுகின்ற நேரம் அல்ல. விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் ஆகும். வடக்கு மாகாண சுகாதார அமைச்சு இவ்வாறான வசதிகளை வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்திக் கொடுப்பின் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என அன்றைய தினம் அங்கு வந்தோர் தமக்குள் பேசிக் கொண்டனர்.
புலம்பெயர்ந்து இத்துறையில் நிபுனர்களாக வதியும் நம்மவர்களைக் கூட சேவை நோக்கில் இங்கு அழைக்கலாம். நிச்சயம் அவர்கள் வருவார்கள்.
வடக்கு மாகாணத்தில் ஒரு வைத்தியசாலையை அதற்கான அதி நவீன மருத்துவ உhகரணங்களுடன் உருவாக்கலாம். ஆகவே வடக்கு மாகாண சபை இதனை காலத்தின் கட்டளையாக கடமை உணர்வுடன் அனுக வேண்டும்.
ஆழப்போகும் சந்ததியை அழ விடலாமா? அழிய விடலாமா?
காரை துர்க்கா

Leave a comment