யாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் !மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்!

24159 0

யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றயதினம் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டிலிருந்து எஸ்.ஏ (S.A) என ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் ஒன்று கைப்பற்றப்பட்டிருந்தாபோதும் அவ்விடயத்தினையும் அதிகாரிகள் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ் கோட்டையை இராணுவத்திடமிருந்து கைப்பற்றி புலிக்கொடி ஏற்றிய விடுதலைப் புலிகள் அக் கோட்டை தமிழரின் அடிமைச் சின்னம் எனக் கருதி அதனை கைதிகளைக் கொண்டு இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் 1995 ஆம் ஆண்டு யாழ் கோட்டையைக் கைப்பற்றிய சிறிலங்கா அரசபடைகள் தமது இராணுவத்தளமாக மாற்றியிருந்தனர்.

பின்னர் கோட்டையின் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு ஏனைய பகுதிகளை தொல்லியல் திணைக்களத்திடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர். அதன் பின்னராக கோட்டையிலிருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேறினர். கடந்த வெசாக் நிகழ்வின் போது தொல்லியல் விதிமுறைகளை மீறி அங்கு வெசக் வலையம் அமைக்க இராணுவத்தினர் பாரிய கிடங்குகளை துளையிட்டனர். ஆனால் தொல்லியல் திணைக்களத்தினர் இவற்றினைக் கண்டுகொள்ளவில்லை.

பின்னராக யாழ் கோட்டையின் ஒரு பகுதியை நிரந்தர இராணுவ முகம் அமைக்க தொல்லியல் திணக்களம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கொழும்பிலிருந்து வருகைதந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இராணுவ உலங்குவானூர்திகள் தரையிறங்கும் பகுதியான யாழ் கோட்டையின் மத்திய பகுதியில் ஒல்லாந்தர் கால சுவர் ஒன்றினை ஆய்வு செய்வதற்காக நேற்று அகழ்வுப் பணியில் ஈடுபட்டனர். இதன்போதே மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த எலும்புக்கூடு ஒல்லாந்தர் காலத்தவர்களுடையது எனக் கூறிய தொல்லியல் ஆய்வாளர்கள் எலும்புக்கூட்டினை வைத்து மீண்டும் மூடிவிட்டனர்.

ஆனால் ஒன்றரை அடி ஆளம் தோண்டியபோதே குறித்த எலும்புக் கூடு தென்பட்டுள்ளது எனவும் எலும்புக்கூடு பழைதடைந்திருக்கவில்லை அது சில வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டாக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை குறித்த எலும்புக் கூட்டிலிருந்து எஸ்.ஏ (S.A) என ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் ஒன்று எடுக்கப்பட்டிருப்பதாகவும்  எனினும் மோதிரம் கைப்பற்றப்பட்ட விடயத்தினை மிக இரகசியம் பேணுவதற்கு தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முனைந்துவருவதாகவும் எலும்புக் கூட்டு விவகாரத்தை மூடிமறைக்க முயல்வதாகவும் எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை நேற்றயதினம் ஏலும்புக்கூடு மீட்கப்பட்டது தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததோடு தெல்லியல் திணைக்களத்தில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அறியக்கிடைத்துள்ளது.

Leave a comment