யாழ்.நகரப்பகுதியில் பொலிஸாரின் துணையுடன் சமூக சீர்கேடுகள்-யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள்

281 0

யாழ்.நகரப் பகுதியில் பொலிஸாருடைய துணையுடன் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோர வேண்டும் என்றும் அவர்கள் முதல்வர் இமானுவேல் ஆனோல்டிடம் கோரியுள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் 5 ஆவது அமர்வு  நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டது. இதன் போது சபையின் பெண் உறுப்பினர்கள் யாழ்.நகரப் பகுதியில் குறிப்பாக பஸ் நிலையம் முன்பாக 18 வயதுக்கும் குறைந்த பெண் பிள்ளைகளை அங்கு வரும் ஓட்டோ சாரதிகள் ஏற்றிச் செல்வதை காணக் கூடியதாக உள்ளது.

அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் ஏறிச் செல்கின்றார்கள். இரவு நேரங்களிலும் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நகரப் பகுதியில் பொலிஸ் காவலரண் உள்ள போதும், இவ்வாறான சமூகத்துக்கு ஒவ்வாத சம்பவங்கள் நடைபெறுகிறது.

இவை அனைத்தும் பொலிஸாரின் உடந்தையுடன் நடைபெறுகிறதா என்று சந்தேகம் உள்ளது என்றனர்.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு யாழ்.மாநகர சபையால் யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை சபை ஏற்றுக் கொண்டு, பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கோருவதாக முடிவு செய்யப்பட்டது.

Leave a comment