காவிரி வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டது சுப்ரீம் கோர்ட் – கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு

406 0

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட் இன்று ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய சுப்ரீம் கோர்ட், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

அதன்படி நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என கூறியிருந்தது.

திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா? என ஆராய்ந்து தீர்ப்பு இன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு செயல் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், உடனே இதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயல் திட்டத்துக்கு எதிராக கர்நாடகா தாக்கல் செய்த மனுவை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a comment