மன்னாரில் மனித எலும்புகள் மீட்கப்பட்ட வளாகத்திற்கு நீதவான் இன்று விஜயம்!

388 0

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வளாகத்திற்கு இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை (17-05-2018) மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா சென்று பார்வையிட்டார்.

குறித்த வளாகத்தில் நேற்று(16-05-2018) புதன் கிழமை காலை சென்ற மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா நிலமையை பார்வையிட்டதோடு, மீட்கப்பட்ட மனித எலும்புகளையும் பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை(17) காலை 10.30 மணியளவில் இரண்டாவது நாளாக குறித்த பகுதிக்கு நீதவான் சென்றிருந்தார்.

இதன் போது, களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா விசேட சட்ட வைத்திய நிபுணர்,  சட்டத்தரணிகள், மன்னார் நகர சபையின் தலைவர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

எனினும், இன்றைய தினம் எவ்வித அகழ்வு பணிகளும் இடம் பெறவில்லை.குறித்த அகழ்வு பணிகள்இமற்றும் ஆய்வுகள் யார் தலைமையில் மேற்கொள்ளப்படும் என கலந்தாலோசிக்கப்பட்டது.மேலும், மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்தல் மற்றும் ஆய்வு செய்கின்ற போது தேவைப்படும் உதவிகளுக்கு அத்திணைக்களங்களை அழைப்பது என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் தினங்களில் குறித்த வளாகத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள், மாற்றும் ஆய்வுகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment