சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுகூரல் (காணொளி)

528 0

chathurukkondanமட்டக்களப்பில் பாரிய சோகமாக வர்ணிக்கப்படும் சத்துருக்கொண்டான் படுகொலை நேற்று நினைவுகூரப்பட்டது.

சர்வதேசமே படுகொலைக்கான நீதியை வழங்கு என்னும் கோரிக்கையை முன்வைத்து, மட்டக்களப்பின் மிகப்பெரும் சோகமாக வர்ணிக்கப்படும் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுகூரப்பட்டது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 1990ஆம் ஆண்டு 186பேர் கைதுசெய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட நினைவு நாள் நேற்று நினைவு கூரப்பட்டது.

இந்நினைவு தினத்தையொட்டி பனிச்சையடி கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், இந்த பூஜையில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து படுகொலைசெய்யப்பட்ட தமது உறவுகளுக்கு நியாயம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியும், படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து மட்டக்களப்பு பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.

அத்துடன் சர்வதேச விசாரணையை கோரி மனித உரிமை அமைப்புக்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்ணம் உட்பட உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

சத்துருக்கொண்டானில் நடைபெற்ற படுகொலையில் 5 கைக்குழந்தைகள் 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் 85 பெண்கள் 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.