7 சாட்சிகளிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை செய்யலாம்- நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவு

252 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் பாலாஜி உள்பட 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்யலாம் என நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தில் நேற்று ஜெயலலிதாவின் தனி செயலாளராக இருந்த வெங்கட்ரமணன் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். அவற்றிற்கு பதில் அளித்தார். அவரிடம் சசிகலா வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்வதற்காக இன்று மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வெங்கட்ரமணன் இன்று ஆஜரானார்.

சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் வந்திருந்தார்.

ஆனால் குறுக்கு விசாரணை நடைப்பெறவில்லை. குறுக்கு விசாரணை செய்வதற்கான சாட்சியின் நகல் இல்லாததால் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்தியவர்களின் சாட்சி நகல் சசிகலா தரப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் 28-ந் தேதி குறுக்கு விசாரணை நடத்தலாம்.

அரசு மருத்துவர் பாலாஜி உள்பட 7 பேரிடம் குறுக்கு விசாரணை செய்யலாம் என நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.

இதுகுறித்து சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறும்போது, “அரசு டாக்டர் பாலாஜி உள்பட 7 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த தயாராக இருக்கிறோம்” என்றார்.

இதையடுத்த போலீஸ் ஐ.ஜி. தாமரைக் கண்ணனும் இன்று ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை புறநகர் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் கமி‌ஷனராக தாமரைக்கண்ணன் பணியாற்றினார்.

தற்போது சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக உள்ள அவரிடம் நீதிபதி, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது நேரில் சென்று சந்தித்தீர்களா? அளிக்கப்பட்ட பாதுகாப்பு என்ன? என்று கேட்டார். மேலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார். அதற்கு அவர் விளக்கம் அளித்தார்.

ஓய்வுபெற்ற காவல்துறை தலைவர் ராமானுஜம் சீருடை பணியாளர் ஏ.டி.ஜி.பி. திரிபாதி, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி. அம்ரேஷ் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a comment