தென்னிந்திய திரையுலகையே கவா்ந்திழுத்த ஈழத்தமிழச்சி!

8900 0

ஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்த விடயம் அனைவராலும் பரவலாக பேசப்பட்ட ஒன்று.

அதிலும் குறிப்பாக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளங்களில் இப்படியான இசைக்கருவி மீளாக்கத்தினை பகிர்ந்திருப்பது முதல்முறையாகும். இந்த நிலையில் தற்பொழுது தென்னிந்திய திரைதுறையினா் பலரின் அபிமானத்தை ஒலிவியா பெற்றிருக்கின்றாா்.

குறிப்பாக சூா்யா, அனிருத் ஆகியோா் ஒலிவியாவின் வீணை இசைக்கருவி மீளாக்கத்திற்கு தமது விருப்புக்களை வழங்கியுள்ளனா்.

சமீபத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட சரக்கு வண்டில என்ற பாடலை ஒலிவியா வீணையில் மீட்டி யூடீயூப் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதனை ரசித்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது அபிமானிகளுடன் இதை பகிர்ந்துள்ளார். இந்த ஈழத்தமிழர் ஒலிவியாவின் இந்த சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த இந்த அந்தஸ்து ஊடகங்களிலும் இணையங்களிலும் அதிகம் பகிரப்பட்டது.

இந்த ஒலிவியா யாா்? இவருடைய பூர்விகம் என்ன? என்று பாா்த்தால்… இலங்கை பூர்விக இடமாக கொண்டவா்தான் இந்த ஒலிவியா தனபாலசிங்கம்.

இவருடைய பெற்றோா்கள் இலங்கையில் இருந்து ஜோ்மனியில் சென்று ஜோ்மனியின் குடியுரிமையை பெற்றவா்கள். ஆனாலும் இளவயதில் இலங்கையில் இருந்து ஜெர்மனிக்கு சென்றாலும் தன் பண்பாட்டை மறவாது கடைபிடித்தனர் ஒலிவியாவின் குடும்பத்தினர்.

ஜெர்மனில் பிறந்த ஈழத்தமிழரான ஒலிவியா தனபாலசிங்கம் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வீணை என்பவற்றினை முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்.

ஓர் நடனக் கலைஞரும், இசைக் கலைஞரும் பாடகரும் ஆவார்.ஜோ்மனியில் பிறந்து வளா்ந்தாலும் வீட்டில் தமிழ் பேசியும், தமிழ்ப் பண்பாட்டைப் பேணியும் வளர்ந்த ஒரு பெண்தான் ஒலிவியா தனபாலசிங்கம்.

ஐந்து வயது முதல் பரதநாட்டியம் கற்றார். பரதநாட்டிய அரங்கேற்றத்தினை 2001 ஜெர்மனியில் நிகழ்த்தினார். 2004 ஆம் ஆண்டு லண்டன் கீழ்த்திசை கலை அகாதெமியினால் வீணை மற்றும் சங்கீதத்திற்கான சங்கீத கலாஜோதி பட்டங்களும், 2007 ஆம் ஆண்டு நாட்டிய கலாஜோதி என்னும் பட்டமும் பெற்றார்.

1997, 1998 ஆண்டுகளில் ஜெர்மனி கலை பண்பாட்டுக் கழகத்தின் கானம்பாடி விருதுகளையும் தங்கப் பதகத்தினையும் வெற்றியீட்டினார். 2006 ஆம் ஆண்டில் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழினால் இவருக்கு ஜேர்மனிய இன்னிசைக்குரல் விருது வழங்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு ஜெர்மனி கலை பண்பாட்டு கழகத்தினால் ஆடற்கலையரசி பட்டம் ஒலிவியாவிற்கு வழங்கப்பட்டது.

அத்துடன் ஒலிவியா நடனத்துடன் பாடல்களையும் வெளியிட்டுள்ளார். இவரை உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஊடகங்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment