சர்வதேச குற்றவியல் மன்றில் இலங்கையை நிறுத்துங்கள்!- ஜெனீவா மனித உரிமைகள் சபை அமர்வில் கஜேந்திரகுமார் ஆணித்தரமாகக் கோரிக்கை!

2484 0

“இலங்கையில் குற்றவிலக்களிப்புக் கொடூரம் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் ஆயம் ஒன்றை அமைத்து அதனிடம் கையளியுங்கள்”
இவ்வாறு ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் கவுன்சிலின் நேற்றைய (14.03.2018) பொது அமர்வில் கோரிக்கை விடுத்தார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அவரது உரையின் சாரம்சம் வருமாறு,
இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். சிங்கள பௌத்த இனவாதக் குழுக்களினால் முஸ்லிம் சமூகம் கடந்த இரு வாரமாக திட்டமிட்ட ஒழுங்குமுறையில் இலக்குவைக்கப்பட்டுவந்திருப்பதை இந்தக் கவுன்சில் அறிந்துள்ளது.

மே 2009 இல் யுத்தம் முடிவுற்ற காலத்திலிருந்து இதே போன்ற குற்றங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ந்து இழைக்கப்பட்டே வருகின்றது. முஸ்லீம் சமூகத்தை நிதி ரீதியில் வெட்டியொதுக்கும் இலக்கோடு இயங்கும் சூத்திரதாரிகள் அதனை ஒப்பேற்றும்வரை எதயும் செய்யாதிருத்தல், இல்லது சிறிதளவே நடவடிக்கையெடுத்தல் என்ற போக்கையே இதுவரை இருந்த அரசுகள் பின்பற்றிவந்துள்ளன.

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்தம் முடிவடைந்த கையோடு இவ்வாறு முஸ்லீம்கள் ஒழுங்குமுறையாக இலக்குவைக்கப்படுகின்றமையை இலங்கைத் தேசம் தன்னைத் தனித்து சிங்கள பௌத்த பேரினவாத நாடாக நிலை மாறும் கொள்கைப்போக்காகவே அர்த்தப்படுத்த முடியும்.

தமிழர்களுக்கு எதிராக இளைக்கப்பட்ட சர்வதேச மனிதஉரிமைகள் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பில் உரியமுறையில் கவனம் செலுத்துவதற்கு இந்த (மனித உரிமைகள்) கவுன்சில் உட்பட்ட சர்வதேச சமூகம் – தவறியமையே மேற்படி பௌத்த சிங்கள பேரினவாத தேசமாக தன்னை நிலைமாற்றும் இலங்கையின் செயற்போக்கான துணிச்சலைத் தருகின்றது.

இந்தநிலமையின் விளைவாகவே இவ்வாறு முஸ்லீம்களும் இலக்குவைக்கப்படுகின்றார்கள். ஆகவே இந்தப் பின்புலத்தில் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளியுங்கள் அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் ஆயம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு அனுப்புங்கள் இதனிலும் குறைந்த எந்த நடவடிக்கை மூலமும் (இலங்கையில் தொடரும்) குற்ற விலக்களிப்பு (கொடூரத்தை) முறைமையை நிறுத்தச் செய்ய முடியாது – என்றார்.

Leave a comment