இந்திய பெண்களுக்காக உழைக்க வேண்டும் – மலாலா பேச்சு

245 0

இந்திய மக்கள் தனக்கு அதிக அளவில் அன்பு மற்றும் ஆதரவை அளித்து வருவதாகவும், இந்தியாவிற்கு சென்று அங்கு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். 

பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாய் (வயது 20). இவர் அங்கு பெண் குழந்தைகள் பள்ளி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து குரல் எழுப்பியதற்காக தனது 15 வயதில் தலீபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மலாலா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றதோடு, ஐ.நா.வின் அமைதி தூதராகவும் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றார்.

அப்போது அங்கு அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இந்திய மக்கள் தனக்கு அதிக அளவில் அன்பு மற்றும் ஆதரவை அளித்து வருவதாகவும், இந்தியாவிற்கு சென்று அங்கு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

நான் இந்தியா குறித்து ஏற்கனவே அதிக அளவில் கற்று இருக்கிறேன். இருப்பினும் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மதிப்புகள் குறித்து மேலும் கற்க விரும்புகிறேன். இந்தியாவின் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி.

இந்தியாவில் இருந்து எனக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. அதில் ஒரு சிறுமி எழுதிய கடிதம் என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது. அதில் அவள், “ஒரு நாள் நாம் இருவரும் நமது தேசங்களின் பிரதமர்களாவோம். அப்போது நாம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி இருநாடுகளுக்கு இடையே அமைதியை கொண்டு வருவோம்” என எழுதி இருந்தாள்.

எதிர்கால சந்ததியினர், குறிப்பாக பெண்கள் கல்வி குறித்து மட்டுமே சிந்திக்காமல், நாட்டின் தலைவர்களாக விரும்புகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment