காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் பேரணி

10414 0

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று காலை நடாத்தினர். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவை வெளிப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரி யாழில் உள்ள யு.என் அலுவலகம்வரை ஆர்ப்பாட்ட பேரணி சென்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையினை வலிறுத்தியும், அரசாங்கத்தினை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

கைகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு, கண்ணீருடன் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில், அந்த அலுவலகத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்படும் போது, அதன் பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் தாங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையிருப்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது பிள்ளைகள் இன்னும் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் இன்னும் நம்புவதாகவும் தமது பிள்ளைகளை ஜனாதிபதி கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a comment