வியப்பின் விலாசங்கள் மாவீரர்கள்.

27632 0

எங்கள் தேசத்தின் எல்லைகளை
உயிர்ப்பூவால் உருவகித்த நாயகரே…!
அரும்பிய இளமைக் கால விருப்புகளை
விரும்பியே மண் வாழ விதைத்தவரே…!
கவிதை வரைபுக்குள் கட்டிவிட முடியாத
விண்தொட்ட வியத்தகு கொடைகளை
தமிழரின் மரபுக்குள் எப்படித்தான் தக்கவைப்பது…
அகத்திரை கிழித்து உம் முகத்தினை நாடுகின்றோம்
இயற்கையின் அசைவுகள் எதுவுளவோ அவை
விழிதிறந்து உணர்வோடு உறவாடும் தருணமே.

மண்ணை மக்களை மொழியை தலைவனை தன்மானத்தை
எல்லை கடந்து நேசித்தமையின் அடையாளமே உயிர்க்கொடை
உங்கள் விழிமடல் மூடாத நீள இராத்திரியில் – நீங்கள்
குடியிருந்த காப்பரண்கள் ஊமையாகி உமை தேடுகின்றன…
தலைவனின் சுட்டுவிரல் அசைவிலே திசையறிந்து
புளகாங்கிதத்தில் அலைமேவி பகை வென்றீர் – இன்று
வெறுமையின் நுரையதை கடல் அள்ளி தரை தள்ளி போகிறது
வெள்ளை மணற்பரப்பில் இன்னும் உங்கள் சுவடுகள்…..!
மீள்வரும் உங்கள் நிகழ்வுக்காய் நீட்டிக் கிடக்கிறது
விண்ணேறி விடைபெற்று எதிரி மையத்துள் பாய்ந்தோரே….
விண்ணொளிரும் நடசத்திரங்களாய் முன்னே தோன்றுகிறீர்
வென்ற காலங்களின் வியப்பை உணர்த்தியே
வியப்பின் விலாசங்களாகி விழிமூடித் துயில் கொள்கிறீர்.

எம் தேசத் தாயே…!
உமக்கு மீட்சி தருவோமென திடம்கொண்டு
நேரிய தலைவரின் பாதையில் தடம்பதித்து
ஆர்ப்பரித்த வேங்கைகளில் உனக்கோ அபார விருப்பு….
அதனால்தானோ இன்னும் வைத்துள்ளாய் அணைத்தபடி
காற்றின் சுழற்சியில் மாவீரர் சுவாசம் எப்போதும்
தேசத்தின் எல்லைகளை நுகர்ந்தபடி தானிருக்கும்….
காந்தள் தழுவி வாகை சூடி வேங்கை உறுமி
காற்றுவந்து காதோடு கதைபேசும் -இன்றும்
அவர் திருப்பாடல் ஒலிக்கயில் விழிகள் பனிக்கும்.

ஒப்புச்சொல்லி அழுகை எழுப்பும் நேரமல்ல
ஒன்றாகி உணர்வோடு எழுச்சி கொள்ளும் நேரமிது…
தேசத்தின் துயிலுமிடங்களில் மீண்டும் மாவீரவாசம்
முற்றத்து மல்லிகையின் முகம்மலர்ந்த பூத்தொடுத்து
சுற்றமெல்லாம் கூடுகிறது சுடர்கள் ஒளிர்கிறது ….
புலம்பெயர் தேசங்களில் எங்கள் புலன்களை இன்னும்
கூர்மைப்படுத்தும் வல்லமையை மாவீரர் தரவேண்டுகிறோம்
தேசப் பெருவெளியில் நிகழ்காலம் சுட்டும் இடைவெளிகளை
அறிவால் மிகைநிரப்பி ஆர்ப்பரிக்க வேண்டும்…..
தேசம் வென்றான் தமிழன் எனும் கோசம் வீசவேண்டும்
சுடர் விடும் ஒளிதனிலே திடம்கொள் சபதம் செய்வோம்
புலரும் காலை புது வரலாறாய் கதிர்வீசி நிமிரும்.

– இரா.செம்பியன்-

Leave a comment