நவ.26 முதல் 28 வரை தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

388 0

அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மாத தொடக்கத்தில் இலங்கை அருகே உருவான மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை ஓய்ந்து ஒரு வாரமாக வெயில் அடிக்கிறது. தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அந்தப் பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக நீடிக்கிறது. இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிற 26-ந் தேதி தென் மேற்கு வங்க கடல் (தமிழகம் கடலோரம்) மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a comment