தொடர்ந்து 69 மணிநேரம் யோகாசனம் செய்து சாதனை

551 0

201606220858586867_Man-performs-yoga-for-69-hours-aiming-to-enter-record-book_SECVPFதமிழகத்தின் பொள்ளாச்சி நகரை சேர்ந்த குணசேகரன் என்ற யோகா ஆசிரியர் தொடர்ந்து 69 மணிநேரம் இடைவிடாமல் யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனையை உருவாக்கியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள ராகல்பாவி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(45). யோகா ஆசிரியரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு யோகாசனம் கற்பித்து பல விருதுகளை பெற்றவராவார்.

இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, உலகிலேயே மிக அதிகநேரம் தொடர்ந்து நிகழ்த்தப்படும் கின்னஸ் உலக சாதனை முயற்சியாக தனிநபர் யோகாசன நிகழ்ச்சியை பொள்ளாச்சியில் உள்ள கே.கே.ஜி. மண்டபத்தில் கடந்த 18-ம் தேதி மாலை 5 மணியளவில் குணசேகரன் துவங்கினார்.

கின்னஸ் விதிமுறைகளின்படி, ஒருமணி நேரத்திற்கு 5 நிமிடம் இடைவெளிவிட்டு பலவகையான யோகாசனத்தை செய்து காண்பித்து வந்தார். கடந்த நான்கு நாட்களாக சுமார் 240 வகையான ஆசனங்களை செய்து அசத்திய அவர், நேற்று பிற்பகல் 2 மணியளவில் தனது 69 மணிநேர தொடர் யோகாசனத்தை நிறைவு செய்ததன் மூலம் முந்தையை உலக சாதனைகளை எல்லாம் முறியடித்து புதிய கின்னஸ் சாதனையை உருவாக்கியுள்ளார்.

இந்த சாதனையை அங்கீகரிக்க இந்த நிகழ்ச்சியின்போது கின்னஸ் நிறுவன பிரதிநிதிகள் யாரும் நிகழ்ச்சி மண்டபத்தில் இல்லை. எனினும், இந்த சாதனை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படும் என குணசேகர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் சீனாவை சேர்ந்த ஒரு குழுவினர் தொடர்ந்து 47 மணிநேரம் யோகாசனம் செய்ததுதான் உலக சாதனையாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment