முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் 3 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை (16) கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், ஊழியர் சிலர்களின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை தவிர ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள இந்த வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும், இதனை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நிதிமன்றில் கோரிக்கை விடுத்தது.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கு தொடர்பான பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
9 13 நாட்களில் 106.6 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய சுங்க திணைக்களம்
சுங்கத் திணைக்களம் 2026ஆம் ஆண்டின் முதல் வாரங்களில் வலுவான வருமானப் பதிவைப் பெற்றுள்ளது. ஜனவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 106.6 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது அந்த மாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட 160.2 பில்லியன் ரூபாய் இலக்கில் 66 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.
கடந்த நவம்பர் மாதம் தித்வா சூறாவளி காரணமாக குறைந்தது நான்கு நாட்களுக்குச் செயற்பாடுகள் ஸ்தம்பித்தன. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் டிசம்பர் மாதத்தில் அதிகரித்த இறக்குமதி அளவுகளுக்கு மத்தியில், கடந்த மாதம் முதல் கொள்கலன் விடுவிப்புப் பணிகளைத் திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டில், இலங்கைச் சுங்கத் திணைக்களம் 2,551 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்தது. இது திருத்தப்பட்ட வருடாந்த இலக்கான 2,241 பில்லியன் ரூபாயை விட அதிகமாகும்.
அத்துடன், அதற்கு முந்தைய ஆண்டின் 1,553 பில்லியன் ரூபாய் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 64.2 சதவீத வளர்ச்சியாகும்.
வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதால், 2026 ஆம் ஆண்டிற்கான சுங்க வருமான இலக்கு 2,207 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13.5 சதவீதம் குறைவானதாகும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

