‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

15 0

“எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒவ்வொரு தொகுதியாக சென்று பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டில், மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேச்சேரி அருகே காரப்பட்டி பள்ளம் பகுதியில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொங்கல் திருவிழா இன்று (15-ம் தேதி) நடந்தது.

இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு, காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியில் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்​வல​மாக அழைத்து வரப்பட்டு, அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், 108 பானைகள் கொண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஒயிலாட்​டம், பொம்மலாட்​டம், வள்ளி கும்மி கலை நிகழ்ச்​சிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்த ஆண்டு நடக்கப்போகிற சட்டபேரவை தேர்தலில் நிச்சயம் வழி பிறக்கும். தமிழகத்தில் 60% பேர் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். இளைஞர்கள், மாணவர்கள் பள்ளி கல்லூரிகளில் தைத் திருநாளை மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகும், அதிமுக ஆட்சிக்காலத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம்.

அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் அதிமுக காலம். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, இன்னும் சில கட்சிகள் சேரப்போகின்றன. இது வெற்றிக் கூட்டணி, நம் கூட்டணி வரும் தேர்தலில் ஆட்சியமைக்கும், அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

அதிமுக உழைப்பாளர்கள் நிறைந்த கட்சி, தொண்டர்கள் நிறைந்த கட்சி. பாஜக 3-வது முறையாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வலிமையான ஆட்சி மத்தியில் நடக்கிறது. உலகம் முழுவதும் பாராட்டப்படக்கூடிய பிரதமராக மோடி இருக்கிறார். இந்தியா பல மாநிலங்கள் கொண்ட நாடு. நாடு வளமாக சிறப்பாக இருக்க மத்தியில் இருக்கிற ஆட்சி துணை நிற்கின்றது.