கொழும்பு – மொரட்டுவை பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பலநாள் திருடன் ஒருவன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மொரட்டுவை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 07 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் பல்வேறு பிரதேசங்களில் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

